காங்கிரசுக்கான உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம் - ப.சிதம்பரம்
காங்கிரசுக்கான உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக போட்டியிட்டது. அதிமுகவை விட திமுக கூட்டணி சற்றே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக செயல்படுவதாக காங்கிரஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிய இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது. அத்துடன், 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் 2 இடங்கள் மட்டுமே திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது. 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், மயிலாப்பூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்ற வருத்தத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது. நாளை காலை வரை தேர்தலுக்கு நேரம் உள்ளது. காங்கிரசுக்கான உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம். ஆதங்கத்தை தான் காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளதே தவிர. இது மிரட்டல் அல்ல. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இக்கூட்டணி தொடர வேண்டுமென்பதே எங்கள் விருப்பம்” என்றார்.