“நாட்டை மீட்க மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும்” - ப.சிதம்பரம்
நாட்டை மீட்க மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நிதியை பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு உதவியதாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் அக்டோபர் 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் டெல்லியிலுள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி திகார் சிறையிலுள்ள ப.சிதம்பரத்தை கடந்த 23 ஆம் தேதி காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், மன்மோகன் சிங்கிற்கு இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் “பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்க மன்மோகன் சிங்கின் ஆலோசனைகளை கேட்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து நாட்டை வெளியே கொண்டு வர அவரால் மட்டுமே முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.