பத்திரிகைச் சுதந்திரத்தை நெரிக்கும் நடவடிக்கை : ப.சிதம்பரம் சாடல்
புதிய தலைமுறைக்கு எதிராக வழக்கு தொடர்வது பத்திரகைச் சுதந்திரத்தை நெரிக்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை சார்பில் கோவையில் வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கடந்த 08-06-2018 அன்று நடைபெற்றது. விவாத நிகழ்வு குறித்து காவல்துறைக்கு புதிய தலைமுறை சார்பில் தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவை நவ இந்தியா எஸ்.என்.ஆர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விவாத நிகழ்வில் ஞானதேசிகன், தமிழிசை சவுந்தரராஜன், செ.கு.தமிழரசன், செம்மலை, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.பாலகிருஷ்ணன், தனியரசு, அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பாக கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் சுரேஷ் குமார், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகைச் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் ப.சிதம்பரம், “புதிய தலைமுறையின் வட்ட மேசை நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு எதிராக வழக்குத் தொடர்வது பத்திரிகைச் சுதந்திரத்தை நெரிக்கும் நடவடிக்கை” என தெரிவித்துள்ளார்.