ஓவியாவை தற்கொலைக்கு தூண்டிய பிக்பாஸ்... நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்
ஓவியாவை தற்கொலைக்குத் தூண்டியதாக பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மன அழுத்தத்தால் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. மன அழுத்தம் இருந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகவும், மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் ஓவியா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் ஓவியா தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி, நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டோமால் நிறுவனம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி என்பவர் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் ‘ 4.8.2017 அன்று 9 மணிக்கு தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி ஒரு வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் செயல்பாடுகளை முழுமையாக பதிவு செய்து ஒளிபரப்படுகிறது என அந்த நிகழ்ச்சியின் நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். அத்துடன் நிகழ்ச்சி தயாரிப்பாளரின் அனுமதியுடன் மட்டுமே சில காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. அப்படி இருக்கையில் அந்த வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நடிகை ஓவியா மூழ்கி தற்கொலைக்கு முயற்சி செய்ததும் ஒளிபரப்பானது. இது தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஓவியா மன அழுத்தத்தால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டேமோல் நிறுவனமும், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலும், தனியார் தொலைக்காட்சியும் ஓவியாவுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி தற்கொலைக்கு துண்டியுள்ளனர். இதன் மூலம் நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை அதிகரிக்கும் நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டுள்ளனர்.
ஆகவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிக்பாஸ் நிகழ்ச்சி ஆபாசத்தை தூண்டுவதாகவும் ஒரு தரப்பினரை இழிவாக பேசுவதாகவும் கூறி பல்வேறு மனுக்கள் காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டுள்ளன.