மக்களவை தேர்தல் 2024 | அதிமுக Vs அண்ணாமலை இடையே தொடரும் வார்த்தை யுத்தம்!

பல மாதங்களுக்கு முன்பே அதிமுகவுக்கு எதிரான அண்ணாமலையின் வார்த்தை யுத்தம் தொடங்கிவிட்டது எனச் சொல்லலாம். அப்படி எங்கே, எப்போது, எப்படி அண்ணாமலை பேசினார் என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
அதிமுக Vs அண்ணாமலை
அதிமுக Vs அண்ணாமலைபுதிய தலைமுறை

``ஒருமுறை பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டால் திராவிடக் கட்சிகளுக்கு இடமிருக்காது என இரண்டு கட்சிகளுக்கும் தெரியும். அதனால், இரண்டு கட்சிகளும் பாஜக உள்ளே வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஆனால், இரண்டு திராவிடக் கட்சிகளின் வாக்காளர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்’’

2024 தேர்தலுக்குப் பிறகு ஒரு திராவிடக் கட்சி தமிழகத்தில் இருக்காது

- என அதிமுகவைக் குறிப்பிடும்படி புதிய தலைமுறைக்கு அளித்த நேர்காணலில் கருத்துத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

அதிமுக Vs அண்ணாமலை
"மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போகும்"- அண்ணாமலை கடும் தாக்கு!
அண்ணாமலை
அண்ணாமலைPT WEB

அதிமுகவுக்கு எதிராக அண்ணாமலை இப்படி கருத்துத் தெரிவிப்பது இது முதன்முறையல்ல... அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும்போதே, அதிமுக குறித்தும், அதிமுகவின் தலைவர்கள் குறித்தும் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களை கடுமையான சர்ச்சைகளையும் எதிர்விமர்சனங்களையும் உண்டாக்கியிருக்கிறது.

அதிமுக - பாஜக கூட்டணிப் பிளவுக்கு வள்ளுவர் கோட்டத்தில் அறிஞர் அண்ணாவை விமர்சித்து அண்ணாமலை பேசியதுதான் காரணம் என அதிமுகவினர் வெளியில் சொன்னாலும், அதற்குப் பல மாதங்களுக்கு முன்பே அதிமுகவுக்கு எதிரான அண்ணாமலையின் வார்த்தை யுத்தம் தொடங்கிவிட்டது எனச் சொல்லலாம். அப்படி எங்கே, எப்போது, எப்படி அண்ணாமலை பேசினார் என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

எல். முருகன் இருக்கும்போதே மோதல்!

பாஜகவின் தலைவராக அண்ணாமலை என்றில்லை, எல்.முருகன் இருந்தபோதே அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே சிறிசிறு முட்டல் மோதல்கள், வார்த்தை யுத்தங்கள் இருந்தன என்பதே எதார்த்தமான உண்மை. புதுவை வில்லியனூரில் எம்.ஜி.ஆருக்கு காவித்துண்டு, எல்.முருகனின் வேல் யாத்திரையில் எம்.ஜி.ஆர்-க்கு பாடல் என பாஜகவின் செயல்பாடுகளுக்கு அதிமுகவிலிருந்து கடுமையான எதிர்வினைகள் இருந்தன. ஆனால், அது கூட்டணியை முறிக்கும் அளவுக்குச் செல்லவில்லை.

எடப்பாடி பழனிசாமி - எல் முருகன்
எடப்பாடி பழனிசாமி - எல் முருகன்

அதேவேளை, அண்ணாமலை தலைவரான பிறகும்கூட அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து முரண்கள், மாறி மாறி விமர்சன மழை பொழிவது போன்ற விஷயங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

முதன்முறையாக அதிமுக தலைவர்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பு!

ஆனால், கடந்தாண்டு மார்ச் மாதத்தில், சென்னை அமைந்தகரையில் நடந்த பாஜக கூட்டத்தில், ``அதிமுகவுடன் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டால், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்தே விலகுவேன்’’ என அண்ணாமலை பேசியதாக வெளியான தகவல் அதிமுக தலைவர்களிடத்தில் கொந்தளிப்பை உண்டாக்கியது.

``ரொம்ப சந்தோசம். அவரது பேச்சில் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. யார் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?’’ என அதிமுகவின் அமைப்புச் செயலாளர்கள் பதிலளித்தனர். அந்தச் சூடு ஆறுவதற்குள்ளாகவே, பாஜக ஐ.டி.விங் தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைய மோதல் இன்னும் சூடுபிடித்தது.

அண்ணாமலை குறித்து கடுமையான விமர்சங்களை முன்வைத்து நிர்மல் குமார் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பாஜகவினரை ஆத்திரப்பட வைத்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை பாஜகவினர் எரித்தனர்.

சமாளித்த அண்ணாமலை:

இந்தநிலையில், ``முன்பெல்லாம் திராவிடக் கட்சிகளிலிருந்து விலகி பலர் பாஜகவில் இணைந்தனர். இப்போது பாஜகவிலிருந்து விலகி மற்ற கட்சிகளில் இணைகின்றன. அந்தளவுக்கு தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்கிறது'' என அண்ணாமலை அதைச் சமாளித்தார்.

அதிமுக Vs அண்ணாமலை
“ஆட்டை பிரியாணி போடுங்கள், அல்லது...” - தொடரும் விமர்சனங்களுக்கு அண்ணாமலை பதில்!

அதுமட்டுமல்லாது, ``கட்சியிலிருந்து யர விலகிப்போனாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. கட்சியில் தலைமை சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்கவேண்டும்’’

நான் ஒண்ணும் தோசை, இட்லி சுடுவதற்காக தலைவராக வரவில்லை. நான் கருணாநிதி, ஜெயலலிதாவைப் போல வலிமையான தலைவர்

என்று அண்ணாமலை பேச, தங்களுடைய தலைவியுடன் ஒப்பிட்டு பேசிவிட்டார் அண்ணாமலை என மீண்டும் அதிமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

அண்ணாமலை
அண்ணாமலை@annamalai_k

பற்றியெரிந்த ஜூவாலை!

"அண்ணாமலை எப்படி தலைவர் ஆனார் என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், நான் ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்லக் கூடாது. ஜெயலலிதா மாதிரி ஒரு தலைவர் இனி பிறக்க போவது இல்லை" என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கருத்துத் தெரிவித்தார்.

இந்தநிலையில், ``நான் மட்டுமல்ல, என் மனைவி, என்னுடைய அம்மா ஜெயலலிதாவைவிட ஆளுமையானவர்கள்” என அண்ணாமலை மீண்டும் திரியைக் கொளுத்திப்ப்போட அதிமுகவினர்கள் மத்தியில் அது ஜூவாலையாக பற்றி எரிந்தது.

“ஊழலைப் பற்றிப் பேசுவதற்குத் தமிழக பா.ஜ.க-வுக்கு அருகதையே கிடையாது” - அதிமுக-வின் காட்டமான விமர்சனம்!

அது ஒருபுறமிருக்க, கடந்தாண்டு ஜூன் மாதத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார் அண்ணாமலை. அப்போது ``ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர் ஜெயலலிதா’’ என்று அண்ணாமலை பேச அது மீண்டும் அதிமுக தலைவர்களை கொதிபப்டையச் செய்தது.

அதிமுக Vs அண்ணாமலை
ஜெயலலிதா டெபாசிட் இழந்தாரா? .. அண்ணாமலை சொன்னது பொய்யா? 1996 தேர்தலில் நடந்தது என்ன?

``ஜெயலலிதாவைப் பற்றிப் பேசுவதற்கு எந்தத் தராதரமும், யோக்கியதையும் அண்ணாமலைக்கு இல்லை. ஊழலைப் பற்றி பேசுவதற்குத் தகுதியற்றவர் அண்ணாமலை. ஒரு கவுன்சிலராகக்கூட பதவி வகிக்காத அண்ணாமலை மீது அவரின் கட்சியைச் சார்ந்தவர்களே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார்கள். சாராயம் விற்பவர்கள், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், ஏழைகளை ஏமாற்றி பண மோசடி செய்தவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு கட்சியில் பொறுப்புகளை வழங்கியவர் அண்ணாமலை. ஊழலைப் பற்றிப் பேசுவதற்குத் தமிழக பா.ஜ.க-வுக்கு அருகதையே கிடையாது” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்தார்.

அண்ணாமலை VS எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை VS எடப்பாடி பழனிசாமி

அதிமுக மா.செக்கள் கூட்டத்திலும் அண்ணாமலையின் பேச்சைக் கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவினரின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு ``ஜெயலலிதா அம்மையாரின் ஆளுமை குறித்து பாராட்டிப் பேசியிருக்கிறேன். ஆனால் வழக்கில் அவரை ஏ1 என்று குறிப்பிட்டுள்ளார்கள். பலரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லலாம். அதற்குள் நான் போக விரும்பவில்லை; அது என் வேலையுமில்லை. அவர் மறைந்துவிட்டார். அவரை பற்றி பேசுவது சரியாக இருக்காது’’ என அண்ணாமலையிடம் இருந்து பதில் வந்தது.

களத்துக்கு வந்த இபிஎஸ்! முற்றிய வார்த்தை போர்... 

தொடந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையின் அரசியல் அனுபவம் குறித்தும் விமர்சனம் செய்ய, அரசியலில் யார் முன்னால் வந்தது யார் பின்னால் வந்தது என்பது முக்கியமல்ல, செயல்பாடுகள்தான் முக்கியம் என அண்ணாமலையிடம் இருந்து பதில் வந்தது.

தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, மதுரையில் ஆகஸ்ட் 20-ம்தேதி நடந்த அதிமுக மாநாடு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது, “அதிமுக மாநாடு பிரமாண்டம் இல்லை என ஏற்கெனவே சொல்லியிருந்தேன் அதையேதான் இப்போதும் சொல்கிறேன். அந்த மாநாட்டுக்கு வந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் பணம் கொடுத்துக் கூட்டிக்கொண்டு வரப்பட்டவர்கள். அதிமுகவுக்கு வாக்குவங்கி எதுவும் அதிகரிக்கவில்லை” எனப் பேசியிருந்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை puthiya thalaimurai

அண்ணாவை பேசி கூட்டணியை முறித்த அண்ணாமலை!

அதனைத் தொடர்ந்து, செப்டம்பரில், சானாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, “மதுரையில் 1956ல் தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசினார். அதைக்கேட்டு முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பிடி ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்தார்” என பேச, அது அதிமுகவினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

அதிமுக Vs அண்ணாமலை
Fact Check : அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதன் உண்மைத்தன்மை என்ன? 1956-ல் மதுரையில் என்ன நடந்தது?

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும்.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

இனிமேல் அண்ணாமலை எங்களது தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும்" என்று முதன்முறையாக பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அதிமுக மே.செக்கள் கூட்டத்திலும் கூட்டணி இல்லை எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக Vs அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி வரலாறு: 'மோடியா லேடியா' - ஜெயலலிதா முதல் 'திரும்பி வராதீர்கள்' இபிஎஸ் வரை!

ஊழல் பட்டியல் எனக்கூறி வீடியோ வெளியிட்ட அண்ணாமலை!

கடந்த ஏப்ரல் மாதம் “அதிமுக தி.மு.க-வினரின் ஊழல் பட்டியல் ரிலீஸ் செய்யப்படும்” என்று கூறியிருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் 14-ம் தேதி சென்னையிலுள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தி.மு.க அமைச்சர்கள் சொத்துப் பட்டியல் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதிமுக Vs அண்ணாமலை
“அண்ணாமலை, திமுக சொத்துப் பட்டியலை வெளியிட்டது அரசியல் ஸ்டண்ட்” - அமைச்சர் துரைமுருகன்

அந்த வீடியோ வெளியிட்ட பிறகு பேசிய அண்ணாமலை, “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் ஆட்சியிலிருந்த அனைத்துக் கட்சியின் ஊழலையும் வெளியிடுவேன். அனைவரையும் நான் மொத்தமாக எதிர்ப்பேன், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பாதியாக ஊழலை எதிர்த்துப் போராடினால் மக்களுக்கு நம்பிக்கை இருக்காது. நான் ஊழலை எதிர்க்கக் கூடாதென்றால், டெல்லிக்குச் சென்று என்னை பா.ஐ.க தலைவர் பதவியிலிருந்து மாற்றுங்கள். மோடி விரும்பும் அரசியலைத்தான் நான் செய்வேன்.

யார் தயவிலும் நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்று அவசியம் இல்லை. நான் 10 தேர்தல்களில் தோற்றாலும் பரவாயில்லை. ஊழலுக்கு எதிராகப் போராடுவேன்.

மின்சாரத்தைத் தொட்டச்சு, இனி விட முடியாது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஊழல் பட்டியலை Part-4 வரை வெளியிடுவேன். அதில் வேறு வேறு கட்சிகளும் இடம்பெறும்” என்று தெரிவித்தார்.

அப்போது ஆட்சியிலிருந்த அனைத்துக் கட்சியுமென்றால் அவர் அதிமுகவையும்தான் குறிப்பிடுகிறார் என்றே எடுத்துக்கொள்ளப்பட்டது. மீண்டும் அதிமுக, பாஜகவினர் இடையே மோதல் வெடித்தது. இதுகுறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி,

அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா என்று தெரியவில்லை. சொத்துப் பட்டியல்தான் வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமி

``ஊழல் பட்டியல் வெளியிடட்டும், பிறகு பார்க்கலாம். முதிர்ந்த அரசியல்வாதி பற்றி கேட்டால் கருத்துச் சொல்லலாம். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகவே அண்ணாமலை பேசிவருகிறார். அவரைப் பற்றி என்னிடம் எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம்” என்றார்.

முன்னாள் அமைச்சர் செம்மலையும் “மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதை வைத்துக்கொண்டு எல்லோரையும் மிரட்டி பூச்சாண்டி காட்டக் கூடாது. சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். மற்றவர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஏன் மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புகிறீர்கள்” என அண்ணாமலையின் பேச்சைக் கண்டிக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இபிஎஸ் - அண்ணாமலை வார்த்தை மோதல்!

அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை விமர்சித்ததோடு டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்தியதாக அதிமுகவையும் விமர்சித்தார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் பூராவும் அப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது அதிமுக ஆட்சியில்தான்" எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கருத்துக்கு "முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை. எல்லையோர மாநிலங்களில் எந்தளவுக்கு போதைப்பொருட்களை பிடிக்கிறார்கள் என்பதுதான் அவர்களது திறமை.

முன்னாள் முதலமைச்சர் இதனை புரிந்துகொள்ள வேண்டும். அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக் கூடாது.
அண்ணாமலை

இவரெல்லாம் முதலமைச்சராக பொறுப்பில் இருந்திருக்கிறார்’’ எனக் கடுமையாக விமர்சனம் செய்தார். இது மட்டுமல்ல, தொடர்ச்சியாக பல்வேறு விஷயங்களில் அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை முன்வைப்பதும் அதற்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து வருகிறது.

புதிய தலைமுறையுடனான நேர்காணலில் அண்ணாமலை காட்டம்!

நேற்றுகூட எடப்பாடி பழனிசாமி பொள்ளாட்சியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ``பாஜகவுக்கு புதிதாக ஒரு தலைவர் வந்துள்ளார். பேட்டி கொடுப்பது மட்டுமே அவர் வேலை. விமானத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். தலைவர்கள் பல வழியில் மக்களை சந்திப்பார்கள். இவர் பேட்டி கொடுத்தே மக்களை நம்பவைத்து வாக்கு பெற முயற்சி செய்கிறார். அது தமிழ்நாட்டில் எடுபடாது. இங்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும். இங்கு அதிமுகதான் உழைக்கிற கட்சி. நீங்கள் எவ்வளவு பேட்டி கொடுத்தாலும் அது எடுபடாது’’ என அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிட்விட்டர்

அதேநிலையில், நேற்று, ``2024 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவே இருக்காது’’ என அண்ணாமலை புதிய தலைமுறை மூலம் பேசியிருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை அதிமுகவினர் மத்தியில் உண்டாக்கியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "இதற்கு எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே மிகத் தெளிவான பதிலை அளித்துவிட்டார். தேவையில்லாத கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாது. நான் ஏற்கனவே சொன்னதை மிகத் தெளிவாகச் சொல்கிறான்.. இங்கே போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான். பாஜகவுக்கு 3ஆவது இடம்தான்" எனப் பதிலளித்துள்ளார் .

ஒருபுறம் பிரதமர் மோடி தொடங்கி பல பாஜக தலைவர்கள் அதிமுகவின் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் புகழ்வதும், ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா கேண்டீனை சிக்கிம் தேர்தல் அறிக்கை வரை கொண்டு செல்வதும் என இருக்க, மறுபுறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த அரசியல் ஆட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com