சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்: பொழுதுபோக்கு தலமாக மாறிய பிரதான சாலை
பாரிவாக்கம் ஏரி நிரம்பி சாலையில் ஆர்ப்பரித்து ஓடும் உபரி நீரில் விளையாடியும் மீன் பிடித்தும் பொதுமக்கள் மகிழ்ந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பூவிருந்தவல்லி ஏரி, பாரிவாக்கம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில், பாரிவாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி அதன் உபரிநீர் பூவிருந்தவல்லி பட்டாபிராம் சாலையில் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கின்றது. புத்தாண்டு மற்றும் விடுமுறை நாளான இன்று பொதுமக்கள் பொழுதுபோக்காக இந்த சாலையில் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
குறிப்பாக சிறார்கள் ஓடும் தண்ணீரில் விளையாடி மகிழ்ந்தனர். அதேபோல் மறுபுறம் சாலையில் மீன் பிடித்து விளையாடினர். இதனால் பூவிருந்தவல்லி பட்டாபிராம் பிரதான சாலை கட்டணமில்லா பொழுதுபோக்கு தலமாக மாறியது.