என்கவுன்டர் கொலைகளும் தமிழக காவல்துறையும் - ஒரு கழுகு பார்வை

என்கவுன்டர் கொலைகளும் தமிழக காவல்துறையும் - ஒரு கழுகு பார்வை

என்கவுன்டர் கொலைகளும் தமிழக காவல்துறையும் - ஒரு கழுகு பார்வை
Published on

தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட என்கவுன்டர் கொலைகள் எத்தனை? அதில் யார் யாரெல்லாம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது பற்றிய ஒரு விரிவான பார்வையை முன்வைக்கிறது இந்தக் கட்டுரை. 

1975ஆம் ஆண்டு தமிழகத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டன. 1979ஆம் ஆண்டு அப்பாவு என்பவரும் 1980 ஆம் ஆண்டு பாலனும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேற்கொண்டு நக்சலைட்டுகள் மீதான என்கவுன்டர்கள் தொடர்ந்தது.

இந்தப் படுகொலை மூலமே என்கவுன்டர் என்ற புதிய அனுகுமுறையை காவல்துறையினர் தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தனர்.  இந்தத் தாக்குதல்களின் தொடர்சியாக, 1‌990ல் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ரவுடிகளின் பக்கம் காவல்துறையின் பார்வை திரும்பியது. 

1996ஆம் ஆண்டு சென்னையில் நுங்கம்பாக்கம் அருகே பிரபல ரவுடி ஆசைத்தம்பி போலீஸார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையார் 2003 ஆம் ஆண்டு என்கவுன்டர் செய்யப்பட்டார். 

இதனை அடுத்து சென்னையின் முக்கிய ரவுடிகளில் ஒருவராக கருதப்பட்ட அயோத்திக்குப்பம் வீரமணி இதே ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்‌. 2004ஆம் ஆண்டு நடந்த என்கவுன்ட்டரில் சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியான அதிமுகவிற்கு அது பெரிய பெயரையும் சம்பாதித்து கொடுத்தது.

2006ஆம் ஆண்டு சென்னை கூடுதல் ஆணையராக இருந்த ஜாங்கிட் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி பங்க் குமார் உயிரிழந்தார். 2007ஆம் ஆண்டில் முக்கிய ரவுடிகளான வெள்ளை ரவி மற்றும் மணல்மேடு சங்கரும், 2008ஆம் ஆண்டில் காசிமேடு பகுதியைச் சேர்ந்த பாபா சுரேஷும் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன் பின் 2010ஆம் ஆண்டு கோவையில் 2 சிறுவர்களை கடத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ஓட்டுநர் மோகன்ராஜ், தப்பியோட முயன்றபோது காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றனர். சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளை வழக்கில், பீகாரைச் சேர்ந்த இளைஞர் 5 பேர், 2012ஆம் ஆண்டு என்கவுன்டர் செய்யப்பட்டனர். 

இதையடுத்து, 2015ஆம் ஆண்டு, ரவுடி கிட்டப்பாவும், 2017ஆம் ஆண்‌டு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரவுடி கோவிந்தன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம், மதுரை சிக்கந்தர்சாவடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் உயிரிழந்தனர். 

அதே ஆண்டு ஜூலை மாதம் ரவுடி ஆனந்தன் என்பவர் சென்னை தரமணியில் நடந்த என்கவுன்டரில் உயிரிழந்தார். சேலம் கரியாப்பட்டியில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயன்ற ரவுடி கதிர்வேல் என்பவரை காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில் ரவுடி வல்லரசு தனது கூட்டாளிகளுடன் எம்.எம்.கார்டன் பகுதியில் அரிவாளுடன் அட்டகாசம் செய்வதாக காவல்துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது. தொடர்ந்து, வியாசர்பாடி காவல்நிலைய காவலர் பவுன்ராஜ், ரமேஷ் ஆகியோர் வல்லரசுவை பிடிக்கச் சென்றனர். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், காவலர் பவுன்ராஜை, வல்லரசு அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறார். படுகாயமடைந்த பவுன்ராஜை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், மாதவரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் ரவுடி வல்லரசு பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர்கள் மில்லர், ரவி உள்ளிட்டவர்கள் ரவுடியை பிடிக்கச் செ‌ன்றனர். அப்போது, உதவிக் காவல் ஆய்வாளர்கள் பிரேம்குமார், தீபன் ஆகிய இருவரையும் வல்லரசு அரிவாளால் வெட்டினார். இதையடுத்து ஆய்வாளர்கள், ரவுடியை துப்பாக்கியால் சுட்டனர்.

 குண்டு பாய்ந்த வல்லரசுவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது‌, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com