”டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு..” - சோதனைகள் குறித்து அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் முழுவதும் தற்போது மொத்தம் 4,829 கடைகள் செயல்பட்டு வருகின்றன. மதுக்கடைகளை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் அல்லது கூடுமான அளவு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒருபுறம் முன்வைக்கப்பட்டு வரும் அதேவேளையில், டாஸ்மாக் கடைகள் செயல்படுவதில் பலவிதமான முறைகேடுகள் நடப்பதாக அவ்வவ்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இத்தகைய சூழலில்தான், கடந்த ஒரு வாரத்தில் டாஸ்மாக் முறைகேடு புகார்கள் தொடர்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
எங்கெல்லாம் ED சோதனைகள்?
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோன், தியாகராய நகரில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லரீஸ் மதுபான நிறுவனம், அக்கார்டு ஓட்டல், ஆயிரம் விளக்கில் உள்ள எஸ்என்ஜே மதுபான நிறுவனம், தி. நகரில் உள்ள கால்ஸ் மதுபான நிறுவனம், சிவா டிஸ்டில்லரிஸ் நிறுவனம், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபான நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் தொடர் சோதனைகள் நடைபெற்றன.
கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் செயல்படும் தனியார் மதுபான ஆலை, விழுப்புரத்தில் உள்ள எம்ஜிஎம் நிறுவன மதுபான ஆலை, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் நிறுவன மதுபான ஆலையில் சோதனைகள் நடத்தப்பட்டன.
எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை..
டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். “டாஸ்மாக் ஊழல் பணம் ரூ.1,000 கோடி யாருக்கு போனது என்பது தொடர்பான அமலாக்கத் துறை புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.
அதேபோல், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய சோதனை நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து இருந்தது.
டாஸ்மாக் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
இந்நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அமலாக்கத்துறையின் அறிக்கையில், “திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளி விபரங்களை உயர்த்தியும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. பார் உரிமங்கள் வழங்குவதிலும், அதற்கான ஒப்பந்தங்களிலும் தவறிழைக்கப்பட்டுள்ளது. ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ. 10-30 வரை அதிகமாக வசூலித்தது தொடர்பான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது. மதுபான ஆலைகள் - டாஸ்மாக் அதிகாரிகள் இடையே நேரடி தகவல் தொடர்ந்து இருந்துள்ளது” என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், பிற முக்கிய கூட்டாளிகள் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அன்றே பழனிவேல் தியாகராஜன் சொன்னது என்ன?
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்த போது டாஸ்மாக் வருமானம் குறித்து முக்கியமான கருத்து ஒன்றினை தெரிவித்து இருந்தார். அதாவது அவர் அளித்த அந்த பேட்டியில், “தமிழகத்தில் ஆயத்தீர்வை வளையத்திற்கு வெளியே விற்பனை செய்யப்படும் மதுவின் அளவு மிகவும் அதிகம். அதிகபட்சமாக 50% அளவுக்கு இது இருக்கலாம். சிறந்த தொழில் நுட்பங்கள் மற்றும் கண்காணிப்பை பயன்படுத்தி இதைத் தடுப்பதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும்.
மதுபாட்டில்கள் மீது ஹோலோகிராம் முத்திரை ஒட்டும் இப்போதைய முறை பயனற்றது. டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கும் கருவிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப் படவில்லை. மது விற்பனை அமைப்பு அடிப்படையாக மேம்படுத்தப்படவேண்டும்" என்று கூறியிருந்தார்.
திமுக அரசுக்கு நெருக்கடியாக மாறுமா?
டாஸ்மாக் ஊழல் முறைகேடு விவகாரம் திமுக அரசுக்கு நெருக்கடியாக மாற வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சிலர் கணிக்கின்றனர். டெல்லியில் நடத்தப்பட்டது போலவே தமிழ்நாட்டிலும் நிச்சயம் பாஜக அரசு இதனை நடத்திக்காட்டும் என்று கூறுகின்றனர்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை இழந்ததற்கு மதுபான ஆலை முறைகேடு விவகாரம் முக்கியமான காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதில் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவும் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தற்போது விசாரணை ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன. அடுத்தடுத்த கட்டங்களை எட்டும் போது தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் போதுதான் இதன் வீரியம் எப்படி இருக்கும் என்பது தெரியவரும்.