தமிழ்நாட்டில் மட்டும் 6 லட்சம் பேர்.. அதிரவைக்கும் நாய்க்கடி சம்பவங்கள்!
2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 6,23,426 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 33 பேர் ரேபீஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் உள்ளன. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டில் 6 லட்சத்து 23 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாகவும் 33 பேர் ரேபீஸ் நோய் தாக்கி உயிரிழந்ததாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு கால்நடைத் துறை வெளியிட்ட தகவல்களின்படி 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 6 லட்சத்து 23 ஆயிரத்து 426 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 33 பேர் ரேபீஸ் நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். 2024ஆம் ஆண்டில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய்க்கடிக்கு ஆளான நிலையில் இந்த ஆண்டில் நாய்க்கடி எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.
அதிபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 27,598 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. செங்கல்பட்டில் 26,233, காஞ்சிபுரத்தில் 23,388 கோயம்புத்தூரில் 17,526, ஈரோட்டில் 16,822 மற்றும் சென்னையில் 15,759 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்புறங்களைவிட சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலுமே நாய்க்கடி பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக 28 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் நாய்க்கடி சம்பவங்களும் அதிகரிக்கின்றன.
அதே நேரம் 2024ஆம் ஆண்டில் 43 பேர் ரேபீஸ் நோயால் உயிரிழந்திருந்த நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகவும் முழுமையாகவும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
2025ஆம் ஆண்டில் சேலம் மற்றம் திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா நான்கு பேர், கோயம்புத்தூரில் மூன்று பேர் ரேபீஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கை, நெல்லையில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, ஈரோடு, கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், நாமக்கல், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒருவர் ரேபீஸ் நோயால் உயிரிழந்துள்ளார்.

