’சம்பளம் கிடையாது..’ போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய அரசு உத்தரவு!
சம வேலைக்கு சம ஊதியம் கோரி 13 நாட்களாக போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, அரசு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது. திமுகவின் 311ஆவது வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆசிரியர்களின் வேலைக்கு வராத நாட்களை ஊதியமில்லா விடுப்பாக பதிவு செய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித் துறை அலுவலகம் முன்பு 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 311ஆவது வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி, கோஷங்களை எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட இரண்டு நாள் அவகாசம் நிறைவடைந்ததாகவும், இனிமேல் போராட்டம் வீரியமடையும் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தசூழலில் வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது..
சம்பள பிடித்தம் செய்ய அரசு உத்தரவு..
பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ சான்று அடிப்படையிலான விடுமுறையை தவிர, வேறெந்த விடுமுறையும் எடுக்க ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள்பணிக்கு வராத நாட்களை ஊதியமில்லா விடுப்பாக பதிவு செய்யவும் மாவட்டகல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

