ஓபிஎஸ் கிணறு விவகாரம்: மீண்டும் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கிணற்றை ஒப்படைக்கக் கோரி லட்சுமிபுரம் கிராம மக்கள் மீண்டும் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் கிராமத்தின் குடிநீர் கிணறு அருகே முன்னால் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான நிலத்தில் ராட்சத கிணறு வெட்டியதால், கிராம மக்களின் குடிநீர் கிணற்றில் நீர் வற்றியதாகக் கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஓபிஎஸ் கிணற்றை கிராமத்திற்கு வழங்க கோரியும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் ஓபிஎஸ் மற்றும் கிராம மக்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிணற்றையும், அது அமைந்திருக்கும் 10 சென்ட் இடத்தையும் கிராம மக்களுக்கு தானமாகத் தருவதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதற்கு மாறாக, அந்தக் கிணற்றை தனது நண்பர் ஒருவருக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.