அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் நாளை விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் நாளை விசாரணை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் நாளை விசாரணை

அதிமுக பொது செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த உரிமையியல் வழக்குகளில் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு, மாலையே சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நீதிமன்ற நடவடிக்கையை மீறும் செயல் மட்டுமல்லாமல், நீதிமன்ற கண்ணியத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம்செய்ய பொதுக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவை கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவித்ததுடன், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதாகவும், திருத்தப்பட்ட இந்த விதியின்படி 1.5கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவிக் காலம் 2026 வரை உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, எந்த காரணமும் இல்லாமல் பொதுச்செயலாளர் பதவிக்கு அவசரமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், வார இறுதி நாட்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டதன் மூலம், போட்டியிட விரும்புவோரை சட்டவிரோதமாக தடுத்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் நாளை காலை 10 மணியளவில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com