"அனைவரும் ஒன்றிணையணும்னு பிரதமர் எப்போதும் சொல்வார்! அவர் சொல்வதை கேட்கணும்" - ஓபிஎஸ்

"அனைவரும் ஒன்றிணையணும்னு பிரதமர் எப்போதும் சொல்வார்! அவர் சொல்வதை கேட்கணும்" - ஓபிஎஸ்
"அனைவரும் ஒன்றிணையணும்னு பிரதமர் எப்போதும் சொல்வார்! அவர் சொல்வதை கேட்கணும்" - ஓபிஎஸ்

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகத்தை திநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களின் அணிக்கு ஆதரவு அளிக்க கோரினார். 

“வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம். வேட்பாளரை விரைவில் அறிவிப்பேன்” என ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியின் தலைவர்களை ஓ பன்னீர்செல்வம் சந்தித்திருந்தார். அந்த வகையில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகத்தையும் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து இன்று அவர் ஆதரவு கோரினார். அந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பேன் என்ற நிலைப்பாடோடு ஏசி சண்முகத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வலுவான இயக்கமாக அதிமுகவை உருவாக்கி தந்துள்ளார்கள். அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்பது தான் தொண்டர்கள் மற்றும் எங்களின் நிலைப்பாடும். எங்களை சந்திக்கும் போதெல்லாம் அனைவரும் இணைய வேண்டும் என பிரதமர் கூறுவார். பிரதமர் போன்ற நல்ல மனிதர் ஒன்றிணைய வேண்டும் என சொன்னால் கேட்க வேண்டும்.

அதிமுகவை இக்கட்டான சூழ்நிலைக்கு இபிஎஸ் தரப்பு தள்ளி விட்டார்கள். அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனால் அதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன். உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேட்டபோது `எம்ஜிஆர் மாளிகை நோக்கி தான் எங்கள் கார் செல்லும்’ என்று நான் சொன்னேன். அதேநேரம், வேறு இடங்களுக்கு போகாது என சொல்லவே இல்லை” என்றார்.

ஓ பன்னீர்செல்வத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம், “அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வத்திடம் கேட்டு கொண்டேன். ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் இணைய எதுவும் வழி இருக்கிறதா, அப்படி எதுவும் வழி இருந்தால் இணைப்பு பாலமாக இருப்பேன் என்றும் இடைதேர்தலில் வேட்புமனு அளிப்பதை தவிர்க்க பன்னீர்செல்வத்திடம் கேட்டுகொண்டேன்.

தேவைப்பட்டால், வாய்ப்பு கிடைத்தால் இணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடமும் சென்று பேசுவேன். A form, B form எடுத்து வாருங்கள் கையெழுத்து போட்டு தருகிறேன் என ஓ பன்னீர்செல்வம் இந்த சந்திப்பில் கூறினார். மேலும் பாஜக அதிமுகவை விழுங்கவில்லை. யாரும் பிரிய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எண்ணம் இல்லை” என்றார். மேலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் ஏசி சண்முகம் போட்டியிடமாட்டார் என்றும் அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com