மனக்கசப்பை மறப்போம்: அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
தற்காலிக மனக்கசப்பை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தற்போதுள்ள ஒட்டுமொத்த சூழலைக் கருத்தில் கொண்டு அதிமுகவின் நலன்கருதி எம்எல்ஏக்கள் முடிவெடுக்க வேண்டும். எதிரிகள் நாம் பிளவுபடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. அவ்வாறு இடமளிப்பவர்களை எம்ஜிஆரின் ஆன்மாவும் ஜெயலலிதாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது. எம்எல்ஏக்கள், தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சிக்கு ஊறுநேராமல் காக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் கட்சிக்கு எது நல்லதோ, அதை எம்எல்ஏக்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

