"அதிமுகவில் தொண்டர்களின் ஆதரவு யாருக்கு என்பதை திருச்சி மாநாடு சொல்லும்" - ஓபிஎஸ் அணியினர் பேட்டி!

திருச்சியில் நாளை நடைபெறவுள்ள ஓபிஎஸ் அணியினரின் மாநாட்டிற்கு சென்னை அதிமுக தலைமை அலுவலகம் போல் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
OPS Team Press Meet
OPS Team Press Meetpt desk

அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பாக திருச்சியில் நாளை மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான மேடை, நாற்காலிகள், தடுப்புகள், விளம்பர பலகைகள் வைக்கும் பணியில் ஓபிஎஸ் அணியினர் ஈடுபட்டுள்ளனர். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாடு மேடை, சென்னை அதிமுக தலைமை அலுவலகம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை என மேடை அமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என இபிஎஸ் அணி சார்பில் காவல் துறையினரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநாட்டு மைதானத்தில் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கு.பா.கிருஷ்ணன், வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது...

ADMK Head Office view
ADMK Head Office viewpt desk

"காவல் துறையினர் நல்ல முறையில் பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள். கடந்த 1956-ல் திருச்சியில் அண்ணா மாநாடு நடத்தினார். அந்த ஆண்டு தான் நான் தி.மு.க வில் இணைந்தேன். அந்த மாநாட்டில் தான் தி.மு.க தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பு நடந்தப்பட்டது. 67 ஆண்டுகளுக்குப் பிறகு அறிஞர் அண்ணா வழியில் இந்த மாநாடு திருச்சியில் நடக்க உள்ளது. இது வரலாறு படைக்கும் மாநாடாக இருக்கும்.

அ.தி.மு.க-வில் ஒருங்கிணைந்த என்ற பேச்சுக்கே இடமில்லை. எம்.ஜி.ஆரிடம் உங்கள் அரசியல் வாரிசு யார் எனக் கேட்டபோது அ.தி.மு.க-வின் தொண்டர்கள் தான் என் அரசியல் வாரிசு என்றார். அந்த வழியில் தொண்டர்களை அழைத்து உங்கள் இயக்கத்தை நீங்களே நடத்துங்கள் என கூறுவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. ஒரு சிலர் பொதுக் குழுவை அவர்களே நியமித்து தலைமை கழக நிர்வாகிகளை நியமித்துள்ளார்கள். அது இட்டுக்கட்டிய சிறு கும்பல். இந்த இயக்கத்துக்கும், அவர்களுக்கும் தொண்டர்களுக்கும் சம்பந்தமில்லை.

EPS and OPS
EPS and OPSpt desk

அதிமுக தனி தன்மை வாய்ந்தது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் தான் பொதுக் குழுவில் யாருக்கு பெரும்பான்மை என பார்ப்பார்கள். ஆனால், கட்சியில் ஜனாதிபதியை தேர்தெடுக்கும் முறையை தான் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார். அதன் மூலம் தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். தேர்தல் கமிஷன் சின்னம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இங்கு நிர்வாகம் முடங்கவே இல்லை. ஒருங்கிணைப்பாளருக்கு முரணாக செயல்பட்டால் அந்த பொதுக் குழுவை கலைக்க ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது.

அ.தி.மு.க-வின் சட்ட விதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள். அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லையோ? என தோன்றுகிறது. அதிமுகவின் தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் எம்ஜிஆருக்கு கொடுத்தது. அது எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமானது அல்ல. அந்த கட்டடத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலும் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் உரியது. எங்கள் தலைவரும் அண்ணியாரும் எங்களுக்கு கொடுத்த சீதனம் அது.

Trichy Conference stage
Trichy Conference stagept desk

திருச்சியில் நாளை நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் பங்கேற்பு குறித்து தற்பொழுது உறுதியாக எதுவும் கூற முடியாது. ஒரு கட்சியிலிருந்து ஒருவர் வேறொரு கட்சிக்கு சென்றால் அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. கட்சி இயங்குவதற்கு தொண்டர்கள் முக்கியம் அதை வெற்றி பெறச் செய்ய மக்கள் ஆதரவு முக்கியம். அதிமுகவில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? ஓபிஎஸ்-க்கு இருக்கிறதா? என்பதை நாளை மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எங்கள் மாநாட்டிற்கு மட்டுமல்ல. அதிமுகவிற்கே முட்டுக் கட்டையாக இருக்கிறார்கள்” என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com