‘தேர்தலின் போது சொத்து மதிப்பை மறைத்துக் காட்டிய இபிஎஸ்’ வழக்கில், சாட்சியாக ஓபிஎஸ் சேர்ப்பு!
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துக் காட்டியதாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ன் நீதிபதி கலைவாணி, மனு மீது உரிய விசாரணை நடத்தி முப்பது நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் கடந்த நான்காம் தேதி எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 (1), (2) மற்றும் (3) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், வேட்புமனு நகல்; தேர்தலின்போது இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு விவரம்; ஒப்புதல் அளித்தவர்கள் விவரம் உள்ளிட்ட ஆவணங்களை சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேகரித்தனர். நீதிமன்ற உத்தரவுபடி நேற்று இது தொடர்பான அறிக்கையை சேலம் மத்திய குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் எடப்பாடி பகுதியின் சார் பதிவாளர், பாதுகாப்பட்டி சார் பதிவாளர், வங்கி மேலாளர் உள்பட பலர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தலின்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்த ஓ.பன்னீர் செல்வமும் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னணியாக “அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட படிவத்தின் அடிப்படையிலேயே எந்த ஒரு வேட்பாளரும் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதி உள்ளது. அதனால்தான் தற்போது சாட்சியாக அவரது பெயரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது” என சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே ‘இந்த வழக்கில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.