”ஓ.பி.எஸ். ஜெயலலிதாவின் முதுகில் குத்திவிட்டார்” - பியூஷ் கோயல் விமர்சனம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 2021-இல் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் அமைத்த அதே கூட்டணியுடன் தேமுதிக உள்ளிட்ட சில புதிய கட்சிகளையும் சேர்த்து ஆளும் திமுக இத்தேர்தலை சந்திக்க காத்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவிருக்கிறது. அதேசமயம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன.
இந்த நிலையில், நாளை மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாநாடு நடைபெறவிருக்கிறது. முன்னதாக, அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக இன்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று மதுரை வந்தார். அவருக்கு பாஜக மாநில நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ”பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையின் கீழ், தமிழக மக்கள் என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற மிகச்சிறந்த தலைவர்களைக் கண்ட இந்த புகழ்பெற்ற மாநிலத்திற்கு அந்தப் பெருமையை மீண்டும் மீட்டுத் தருவோம். ஜெயலலிதாவின் உணர்வையும், அவர் தமிழக மக்களுக்கு வழங்கிய நல்லாட்சியையும், பெண்களுக்கு அவர் அளித்த மரியாதையையும் நாங்கள் மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
அப்போது அவரிடம், ”ஓ. பன்னீர்செல்வம் திமுகவுடன் இணைந்துள்ளார், இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? வரும் தேர்தலில் இது என்.டி.ஏ கூட்டணியில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ”ஜெயலலிதா யாருக்கு இவ்வளவு மரியாதை, அன்பு மற்றும் முதலமைச்சராகும் வாய்ப்பை வழங்கினாரோ, அதே நபர் ஜெயலலிதாவின் தத்துவங்களுக்கும் உயரிய லட்சியங்களுக்கும் முதுகில் குத்தியதை தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சுயமரியாதை உள்ள தமிழக மக்கள் பன்னீர்செல்வத்தை மன்னிக்க மாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இன்று மதுரையில் தங்கவுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் எனத் தகவல் வெளியாகவுள்ளது.

