கே. பழனிசாமி தலைமையில் கூட்டணி கிடையாது.. நிர்வாகிகள் கருத்தை வழிமொழிந்த ஓபிஎஸ்.!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தமிழ்நாடு வந்தார். தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் சூழல் குறித்தும், தொகுதிப்பங்கீடு குறித்தும் பேசியதாக தகவல் வெளியானது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் இடம்பெற எடப்பாடி பழனிசாமி சம்மதித்ததாகவும், 3 தொகுதிகளை ஓ.பி.எஸ் அணிக்கும் 6 தொகுதிகளை அமமுகவுக்கும் வழங்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தான், சென்னை புரசைவாக்கத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அந்தக் கூட்டத்தில் பேசிய வைத்திலிங்கம், குரங்கு கையில் பூமாலையாகி விட்டது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருக்கும் வரை தாங்கள் மீண்டும் இணையப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய ஓ. பன்னீர் செல்வம், 1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார். தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு யாராலும் வீழ்த்த முடியாத அளவிற்கு முதலமைச்சாராக இருந்தார். அவருக்குப் பிறகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வெற்றிகரமாக வழிநடத்தினார். ஆனால், இந்த வரலாற்று சிறப்பு மிக்க இயக்கம் தற்போது எப்படி இருக்கிறது. நடந்து முடிந்து, 2024-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்திருக்கிறது அதிமுக. 14 நாடாளுமன்ற தொகுதிகளில் 3 ஆம் இடத்திற்கு சென்று விட்டது. இந்த பழனிசாமி என்ற பெயரை கூறுவதற்கே வெட்கமாக இருக்கிறது.
அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தான். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளார் என்ற கட்டமைப்பை உருவாக்கினோம். ஆனால், ஒற்றை தலைமை தான் வேண்டும் எனப் பேசினார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்ற மாயையை உருவாக்கினார்கள். ஆனால், பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நடந்த 11 தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்து இருக்கிறார். ஒரு மாபெரும் இயக்கத்தை படுகுழியில் தள்ளிவிட்டார். எனவே, அவருக்கு வரும் காலங்களில் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்" எனக்கூறிய அவர் முன்னாதாக பேசிய நிர்வாகிகளின் கருத்தை வழிமொழிகிறேன் எனத் தெரிவித்தார்.

