சசிகலா ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக முடியாது: ஓ.பன்னீர்செல்வம்

சசிகலா ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக முடியாது: ஓ.பன்னீர்செல்வம்

சசிகலா ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக முடியாது: ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுடன் இருந்த ஒரே காரணத்தினாலேயே சசிகலாவால், அவரது அரசியல் வாரிசாக முடியாது என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களால் நீங்களாவது விசுவாசமாக இருங்கள் பன்னீர்செல்வம் என்று வேதனையுடன் தம்மிடம் கூறியதாகத் தெரிவித்தார். ஜெயலலிதா கூறியதைக் கேட்டு தான் கண்கலங்கியதாகவும் பன்னீர் செல்வம் கூறினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் அளித்த பதிலில் மக்களுக்கு திருப்தி இல்லை என்பதால், விசாரணை கமிஷன் அமைப்பது குறித்து பேசியதாகவும் பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதலமைச்சர் பதவியை தாம் ஏற்க மறுத்ததாகவும், அசாதாரண சூழல் ஏற்பட்டதால்தான் பதவியை தான் ஏற்றதாகவும் கூறிய பன்னீர்செல்வம், பதவியை ஏற்றதே அத்துணை பிரச்னைகளுக்கும் காரணம் என்றும் கூறினார்.

அதிமுக தலைமை அலுவகலத்தில் நடந்த கூட்டத்தில் கட்டாயத்தின் காரணமாகவே சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக கூறிய பன்னீர்செல்வம், அனைத்து உறுப்பினர்களும் தனக்கு ஆதரவு தரும் சூழல் ஏற்படும் என்றார். சசிகலா பதவியேற்பில் ஏற்படும் தாமதத்துக்கான காரணத்தை ஆளுநர்தான் விளக்க வேண்டும் என்றும், தமக்கு பின்னணியில், பாஜக, திமுக உள்ளிட்ட எந்த கட்சியினரும் இல்லை என்றும், அவர்களிடம் ஆதரவு கேட்கும் தேவை தமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு நான் காரணமில்லை என்று கூறிய பன்னீர்செல்வம், முதலமைச்சர் பதவி குறித்து அமைச்சர்கள்தான் பேசி குழப்பத்தை விளைவித்தனர் என்று விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவுடன் இருந்த ஒரே காரணத்தினாலேயே சசிகலாவால் அவரது அரசியல் வாரிசாக முடியாது எனவும் அதிமுகவில், தனது அரசியல் வாரிசு என ஜெயலலிதா யாரையும் அடையாளம் காட்டவில்லை என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ராஜினாமாவைத் திரும்பப் பெறுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், மக்களின் கருத்தைத் தொடர்ந்து அறிந்து வருவதாகவும், முழுமையாக அறிந்த பின்னர் அது குறித்து முடிவெடுப்பேன் என்றும் அவர் கூறினார். அதிமுக தலைமை மறுபடியும் பேசினால் உங்கள் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த பன்னீர் செல்வம், அது குறித்து மூத்த தலைவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com