தூத்துக்குடி தொடர் துப்பாக்கிச்சூட்டினை கண்டித்து அனைத்துக்கட்சிகள் சார்பாக நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தாக செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், தமிழக மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதில் முழுமையாக தோற்றுவிட்ட அதிமுக அரசு பதவி விலக்கோரியும் போராட்டம் நடைபெறுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம், அகில இந்திய தேசிய காங்கிரஸ், இடதுசாரி அமைப்புகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அறவழியில் மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில், வணிகர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை கடையடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். இந்த கடையடைப்பில், தமிழகத்திலுள்ள அனைத்து வணிகர்களும் பங்கேற்க வேண்டுமென அவர் அழைப்புவிடுத்தார்.