அமமுகவை சேர்ந்த தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சி, கரூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது முதல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக, தங்க தமிழ்ச்செல்வன் இருந்தார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடர்ந்து அமமுகவிற்காக களப்பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான் எனவும் எனது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் என்னைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டியது தானே என தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடந்து விரைவில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கப்படுவார் என டிடிவி தினகரன் தெரிவித்தார். அதிமுகவினர் சிலர் தங்க தமிழ்செல்வனை இயக்குகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.
ஆனால் தங்க தமிழ்செல்வன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். என்னை யாரும் இயக்கவில்லை. எனது அடுத்தகட்ட நடவடிக்கை
அமைதியாக இருக்க போகிறேன் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், அமமுகவை சேர்ந்த தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சி, கரூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு துரோகம் செய்த தங்க தமிழ்செல்வனை கட்சியில் சேர்க்க கூடாது என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.