ட்விட்டரில் ட்ரெண்டான ‘மண்டியிட்டு மன்னிப்பு கேள்’

ட்விட்டரில் ட்ரெண்டான ‘மண்டியிட்டு மன்னிப்பு கேள்’
ட்விட்டரில் ட்ரெண்டான ‘மண்டியிட்டு மன்னிப்பு கேள்’

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்காத விஜயேந்திரர் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆளுநர் உள்ளிட்ட விழாவில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்த நிலையில், விஜயேந்திரர் மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்தச் செயல் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்காத விஜயேந்திரர் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்தோடு மட்டுமில்லாமல் #Tamil_Insulted என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. #மண்டியிட்டு_மன்னிப்புகேள் என்கிற ஹேஷ்டேக்கில் பலரும் விஜயேந்திரருக்கு எதிரான தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்து 8 கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்திய விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொருவரோ, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மதுரை தமிழ்த் தாய் சிலைக்கு முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதேபோன்று விஜயேந்திரருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com