மத்திய அமைச்சராகிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன்?
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், உயர்கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சதானந்த கவுடா, சந்தோஷ் கங்குவார் உள்ளிட்ட மேலும் சில மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதுவரை மத்திய அமைச்சர்கள் 12 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அனுப்பிரியா படேல், வருண் காந்தி, நிஷாத் ஆகியோருக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஜோதிராதித்ய சிந்தியா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனாவால், ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரருக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வரிசையில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் எல்.முருகன் பங்கேற்ற நிலையில் அமைச்சராவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

