இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அரசின் இது போன்ற நடவடிக்கைக்கு இந்தியா தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையால் பிடிபடும் தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமை ஆக்கப்படும் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர பேசியிருப்பதை முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில் இலங்கையின் இந்த நடத்தை துரதிருஷ்டவசமானது என்று பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உள்ள பாரம்பரிய உரிமைகள் மீது மிரட்டல் விடுக்கும் விதமாக இதுபோன்ற செயல்கள் அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசிடம் இதுதொடர்பாக இந்தியா தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை சிறைகளில் வாடும் 51 தமிழக மீனவர்களையும், சிறைபிடிக்கப்பட்டுள்ள 114 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்