’வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது அதிமுகவாக இருக்கட்டும்’.. திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ் ஆவேச பேச்சு!

” ‘பன்னீர்செல்வத்தை தொண்டராகப் பெற்றது எனது பாக்யம்’ என்று ஜெயலலிதா கூறியதே, நான் பெற்ற மிகப்பெரிய பாக்யம் இதுதான்” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ், திருச்சி மாநாடு
ஓபிஎஸ், திருச்சி மாநாடுதிருச்சி நிருபர் லெனின்

திருச்சி மாநகரில் உள்ள பொன்மலை ஜி.கார்னர் இரயில்வே மைதானத்தில் ஓபிஎஸ் அணியினரின் முப்பெரும் விழா மாநாடு இன்று (ஏப்ரல் 24) நடைபெற்றது. இதற்காக, சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகம் போன்ற தோற்றத்தில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இம்மாநாட்டில், பண்ருட்டி ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் மற்றும் ஜேசிடி.பிரபாகர், ஓ.பி.எஸ்.ரவீந்திரநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “இயக்கத்தில் இருப்பதே புண்ணியம் என்று வாழ்பவர்கள் அதிமுக தொண்டர்கள். ’வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது அதிமுகவாக இருக்கட்டும்’ என்று வாழ்பவர்கள் தொண்டர்கள். தலைமைப் பொறுப்புக்கு யார் வர வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தொண்டர்களாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தவர், எம்ஜிஆர். 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த ஒரே இயக்கம் அதிமுக. அந்தப் பெருமைக்குரியவர் ஜெயலலிதா. ’தொண்டரோடு தொண்டராகத் தோள்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பன்னீர்செல்வத்தை தொண்டராகப் பெற்றது எனது பாக்கியம்’ என்று ஜெயலலிதா கூறினார். அதுதான் நான் பெற்ற மிகப்பெரிய பாக்கியம்.

ஓபிஎஸ் திருச்சி மாநாடு
ஓபிஎஸ் திருச்சி மாநாடுதிருச்சி நிருபர் லெனின்

16 லட்சம் தொண்டர்களோடு எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு, ஒன்றரை கோடி தொண்டர்களாகக் கழகத்தை உயர்த்தியவர் ஜெயலலிதா. தொண்டர்கள்தான் அதிமுகவின் உயிர்நாடி. தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எம்ஜிஆர் சட்ட விதியை ஏற்படுத்தினார். அதை கண்ணும் கருத்துமாக ஜெயலலிதா காப்பாற்றினார். அதன்பிறகு வந்த அரசியல் வியாபாரிகள், நயவஞ்சகர்கள், கல்நெஞ்சக்காரர்கள் அதை நீக்கிவிட்டனர். அவர்களை ஓடஓட விரட்டுகிற காலம் வரும்.

இரண்டு முறை ஜெயலலிதா, ஒருமுறை சசிகலா ஆகியோர் எனக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தனர். திரும்பக் கேட்டார்கள் கொடுத்து விட்டேன். அதிமுகவின் நிதியைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து மாநாடுகளை நடத்துவோம். திருச்சியில் கடல் இல்லை; இன்று அக்குறையை அதிமுக தொண்டர்கள் நீக்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரத்திற்கு சாவுமணி அடிக்க வேண்டும். நமது இயக்கம் ஒரு குடும்பத்தின் கையிலோ, தனி நபர் ஆதிக்கத்திலோ சிக்கிக் கொள்ளக் கூடாது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்திருச்சி நிருபர் லெனின்

தொண்டர்களே கட்சிக்கு தலைமையும், முதல்வர் பதவியையும் வகிக்க வேண்டும். அடுத்த ஆட்சி ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும். வரும் காலத்தில் அறக்கட்டளை அமைத்து அதிமுக தொண்டர்களுக்கு உதவிட திட்டமிட்டுள்ளோம். தொண்டர்களின் உரிமையை மீட்டுக் கொடுக்கிற தர்மயுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். சாதாரண தொண்டனும் முதல்வராக முடியும் என்ற உரிமையை மீட்பதற்கான தர்ம யுத்தத்தை தொடங்கி இருக்கிறோம். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்” என்றார்.

இதில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “நாட்டை ஆளுவதற்கு நம்பிக்கைக்குரிய நபர் என ஜெயலலிதா அடையாளம் காட்டிய நபர் ஓ.பி.எஸ். பதவிக்காக காலில் விழுந்து பதவியைப் பெற்று பின்னர் காலை வாரி விடுபவர்கள் என்றும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்க முடியாது. புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி காட்டிய வழியில், சாதி, மத, பேதம் இல்லாமல், எல்லா மக்களின் நலனுக்காக பாடுபடக்கூடிய இயக்கம் அதிமுக. இங்கே கூடியிருக்கும் கூட்டம் தான் உண்மையான அதிமுக” என்றார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்திருச்சி நிருபர் லெனின்

இம்மாநாட்டில், ’ஓபிஎஸ்ஸை நீக்கியதை இந்த மாநாடு நிராகரிக்கிறது. இபிஎஸ் கையில் உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்பட வேண்டும். உண்மையான தொண்டர்களை கண்டறிந்து, முறையான அடையாள அட்டை கொடுத்து, அவர்கள் மூலம் தேர்தல் நடத்தி, புதிய பொதுக்குழுவை தேர்வு செய்ய வேண்டும். நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா (ஜெ.ஜெயலலிதா) மட்டுமே. போலி பொதுக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை நீக்கம் செய்ய வேண்டும்’ என 5 தீர்மானங்கள் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனால் முன்மொழியப்பட்டது.

- லெனின், திருச்சி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com