ooty varki
ooty varkifile

15 ஆண்டுகால போராட்டத்துக்கான பலன்.. ஊட்டி வர்க்கிக்கு கிடைத்த புவிசார் குறியீடு அங்கீகாரம்!

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமான ஊட்டி வர்க்கிக்கு விரைவில் புவிசார் குறியீட்டு எண் கிடைக்க உள்ளது.
Published on

ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் அதிகமான பேக்கிங் பொருட்களை தயாரித்து உட்கொண்டனர். அப்படி அவர்கள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதான் குக்கிஸ், பிஸ்கட்ஸ். அது அவர்களின் பிரதான உணவாக இருந்தது. இதனை நீலகிரியின் மணம் கமழும் தேநீரோடு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் பணியாற்றிய சில சமையல்காரர்கள், அந்த பிஸ்கட்டை அடிப்படையாக வைத்து புது சுவையில் ஒரு வகை தின்பண்டத்தை உருவாக்கினர். இதுதான் தற்போது வர்க்கி என்றழைக்கப்படுகிறது.

இது ஆங்கிலேயர்களுக்கு பிடித்துப்போக, தற்போது அது நீலகிரியின் அடையாளமாகவே மாறி விட்டது. குக்கிஸ் பொருளுக்கு மாற்றாக, 'வற வற' என, இருந்ததால், அந்த தின்பண்டம் 'வறக்கிஸ்' என முதலில் அழைக்கப்பட்டது. பின்பு வர்க்கி என பெயர் மருவியது.

ஆங்கிலேயர் காலத்தில், நெய் கலந்த மாவு பொருளை, நெய்யில் வறுத்து எடுத்ததால் இதற்கு வர்க்கி' என்ற பெயர் வந்தது என மற்றொரு தகவலும் உண்டு. நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வர்க்கிகள், தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இங்குள்ள பேக்கரிகள், டீக்கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளில் விற்கப்படுகின்றன.

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இந்த ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு பெற அதன் உற்பத்தியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக கடும் முயற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது அவர்களின் முயற்சியின் பலனாக ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பலகட்ட ஆய்வுக்கு பின் கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி புவிசார் குறியீடு இதழில் ஊட்டி வர்க்கிக்கு, புவிசார் குறியீடுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

4 மாதங்களுக்குள் அதாவது மார்ச் 30 ஆம் தேதிக்குள் இதற்கு ஆட்சேபம் எழுந்தால் அந்த விண்ணப்பம் மறுபரிசீலனைக்கு உள்ளாகும். இல்லாவிடில் அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுவிடும். அதன்படி வருகிற 31 ஆம் தேதியில் இருந்து ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு என்கிற மகத்தான அங்கீகாரம் கிடைக்க உள்ளது.

புவிசார் குறியீடு ஊட்டி வர்க்கிக்கு கிடைப்பது ஊட்டியின் பாரம்பரியத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது. மேலும் ஊட்டியை தவிர வேறு எங்கு தயாரிக்கும் வர்க்கியையும் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்வதை, சட்டப்பூர்வமாக தடுக்க முடியும். இது இங்குள்ள நூற்றுக்கணக்கான வர்க்கி உற்பத்தியாளர்களுக்கு வர பிரசாதமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com