Ooty, Coonoor, Gudalur constituencies Who benefits?
Nilgris X

தேர்தல் களம் | உதகை, குன்னூர், கூடலூர் தொகுதிகள்.. யாருக்குச் சாதகம்?

’மலைகளின் அரசி’ என வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுவாரஸ்யமான தேர்தல் களத்திற்கும் பெயர் பெற்றது. உதகமண்டலம், குன்னூர், கூடலூர் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மாவட்டம் குறித்துப் பார்க்கலாம்.
Published on
Summary

நீலகிரி மாவட்டத்தின் உதகை, குன்னூர், கூடலூர் தொகுதிகளில் திமுக, காங்கிரஸ், அதிமுக கட்சிகள் பலம் பெற்றுள்ளன. உதகையில் காங்கிரஸ், குன்னூரில் திமுக, கூடலூரில் அதிமுக ஆதிக்கம் செலுத்துகின்றன. மக்களின் முக்கியக் கோரிக்கைகள் வேலைவாய்ப்பு, விலைவாசி நிர்ணயம் மற்றும் மனித-வனவிலங்கு மோதலுக்கு தீர்வு காண்பது ஆகும்.

உதகமண்டலம்

தேயிலை, காபி, மலைக் காய்கறிகள் மற்றும் சுற்றுலா ஆகியவையே இங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரம். நீலகிரி மாவட்டத்தில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உதகை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆர்.கணேஷ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்குள்ள இத்தொகுதியில், மூடப்பட்டுள்ள எச்.பி.எஃப், ஸ்டெர்லிங் பயோடெக் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்குப் பதிலாக புதிய ஐடி நிறுவனங்களை அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. மேலும், கோடப்பமந்து கால்வாய் மீது புதிய பார்க்கிங் வசதி, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவையும் மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளாகும்.

குன்னூர்

குன்னூர் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த கா.ராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் இத்தொகுதியில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களின் நீண்டகாலக் கோரிக்கையான, பச்சைத் தேயிலைக்கு கிலோவுக்கு 40 ரூபாய் நிரந்தர விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதே இங்குள்ள முக்கியப் பிரச்சினையாகும்.

Tea Estate workers
Tea Estate workers X

கூடலூர்

தனித்தொகுதியான கூடலூரில் அதிமுகவின் பொன்.ஜெயசீலன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இருளர், குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள இத்தொகுதியில், விளைநிலங்களுக்குள் புகும் வனவிலங்குகளைத் தடுத்து, மனித-வனவிலங்கு மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் முதன்மைக் கோரிக்கையாக ஒலித்து வருகிறது. சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளைக் கொண்டுள்ள படுகர் சமுதாய மக்களின் நிலைப்பாடே, இந்த நீலகிரி மாவட்டத்தின் 3 தொகுதிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்குகிறது.

kurumbas - the ancient tribes
kurumbas - the ancient tribes X

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய 3 தொகுதிகளில் தற்சமயம் திமுக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும், அதிமுக ஓர் இடத்திலும் பலம் பெற்றுள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் திமுக கூட்டணி 6 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், 2001இல் மட்டும் அதிமுக கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுரீதியாக உதகையில் காங்கிரஸும், குன்னூர் மற்றும் கூடலூரில் திமுகவும் அதிகமுறை வென்று தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com