”ரேஷன் கடை மளிகை தொகுப்பில் 6 பொருட்கள்தான் இருந்தது” - வேதனையுடன் வீடுதிரும்பிய மூதாட்டி

”ரேஷன் கடை மளிகை தொகுப்பில் 6 பொருட்கள்தான் இருந்தது” - வேதனையுடன் வீடுதிரும்பிய மூதாட்டி
”ரேஷன் கடை மளிகை தொகுப்பில் 6 பொருட்கள்தான் இருந்தது” - வேதனையுடன் வீடுதிரும்பிய மூதாட்டி

தமிழக அரசு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கிய 14 பொருட்கள் அடங்கிய பையில், ஆறு பொருட்கள் மட்டுமே இருந்ததால் ஏமாற்றமடைந்திருக்கிறார் மூதாட்டியொருவர்.

நெல்லை பாளையங்கோட்டை பொட்டல் பகுதியில் வசிப்பவர் ஞானசுந்தரி. 60 வயதை கடந்த இவர், இன்று திருவண்ணநாதபுரம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் தமிழக அரசு வழங்கியுள்ள 14 பொருட்கள் அடங்கிய பையை வாங்கி வந்துள்ளார். ஆனால் அதில் அரசு குறிப்பிட்ட 14 பொருட்கள் அனைத்தும் கொடுக்கப்படாமல் ரவை, மைதா, உப்பு, தேயிலை, கடலை பருப்பு, சீரகம் என 6 பொருட்கள் மட்டுமே வழங்கி உள்ளனர்.

இதுபற்றி வேதனை தெரிவித்திருக்கும் அம்மூதாட்டி, "நான், தினமும் 450 ரூபாய் சம்பளத்துக்கு, கட்டிடட வேலையிடத்தில் கூலி வேலை செய்து வருகிறேன். கடந்த வியாழக்கிழமை நியாயவிலை கடைக்கு சென்று அரசு வழங்கிய 2000 பணம் பெற்றுக் கொண்டேன். ஆனால் 14 பொருட்கள் அடங்கிய பையை சனிக்கிழமை வந்து வாங்குமாறு சொன்னார்கள். சனிக்கிழமை சென்றதற்கு, செவ்வாய்க்கிழமை வாருங்கள் என சொன்னார்கள். இன்று போனேன். ஆனால் ஆறு பொருட்கள் மட்டுமே கொடுத்துவிட்டு, 'இதை வைத்துக் கொள்ளுங்கள்' என்று அனுப்பி விட்டார்கள். இப்படி 6 பொருட்களை மட்டும் வாங்குவதற்கு பதிலாக, நான் இன்று வேலைக்கு சென்றால் 450 ரூபாய் சம்பளம் வாங்கி இன்னும் நிறைய பொருட்களை வாங்கி இருப்பேன்" என்றார்.

மூதாட்டியின் புகார் தொடர்பாக புதிய தலைமுறை வாயிலாக திருவண்ணநாதபுரம் நியாயவிலை கடைக்கு நேரில் சென்று விசாரித்தோம். "613 ரேஷன் கார்டுகள் கொண்ட இந்த கடையில் இதுவரை 600 பைகள் மட்டுமே வந்துள்ளது. இன்னும் வரவேண்டிய 13 பைகள் வந்துவிட்டால் நாங்கள் அந்த மூதாட்டிக்கு வழங்கி விடுவோம்" என தெரிவித்தனர்.

- நெல்லை நாகராஜன் | படங்கள்: நாராயண மூர்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com