76 ரூபாய் பிரியாணிக்காக ரூ.40,000-ஐ கோட்டைவிட்ட பெண்... உஷார் மக்களே..!
இணையதளத்தில் 76 ரூபாய்க்கு பிரியாணி ஆர்டர் செய்த கல்லூரி மாணவியிடம், நூதன முறையில் ரூ.40 ஆயிரத்தை அபேஸ் செய்த ஆன்லைன் மோசடி கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டை நாட்டுப்பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ப்ரியா அகர்வால் (21). நேற்று காலையில் பசி வயிற்றைக் கிள்ளவே சுவையான பிரியாணி சாப்பிட விரும்பினார். தனது கையில் இருந்த ஆண்ட்ராய்டு செல்போனில் பிரியாணி கடைகளை தேடினார். அதன்படி வடபழனியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பிரியாணி வாங்க முடிவு செய்தார்.
இதனையடுத்து ‘உபர் ஈட்ஸ்’ இணையதளம் மூலம் 76 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தார். அதற்காக அவர் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த ஆர்டர் கேன்சல் ஆகி விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூகுள் தேடுதல் மூலமாக "உபர் ஈட்ஸ்" சேவை எண்ணில் தொடர்பு கொண்டு ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டது எனது பணம் 76 ரூபாயை திரும்ப தாருங்கள் என கேட்டுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் 76 ரூபாய் தனியாக திரும்பத் தரமுடியாது. ரூ. 5000 செலுத்துங்கள் 5,076 ரூபாயாக திரும்பவும் உங்களது வங்கிக்கணக்கில் பணம் வந்து சேர்ந்து விடும் என கூறினார்.
இதனை நம்பிய ப்ரியா உடனே தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரத்தை செலுத்தினார். அது தொடர்பாக மீண்டும் இணையதள சேவை எண்ணுக்கு போன் செய்து பேசினார். ஆனால் அவர்கள் பணம் கிரெடிட் ஆகவில்லை. மீண்டும் 5,000 பணம் செலுத்துங்கள் என கூறவும் ப்ரியா மீண்டும் ரூ.5 ஆயிரத்தை செலுத்தினார். பணம் வரவில்லை என தொடர்ந்த அவர்கள் கூறவே இதேபோல 8 முறை 5 ஆயிரத்தை செலுத்தியுள்ளார் ப்ரியா.
இதேபோல மொத்தம் ரூ.40 ஆயிரத்தை செலுத்திய ப்ரியா அந்த சேவை எண்ணுக்கு போன் செய்தபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் இழந்த 76 ரூபாயும் அவருக்கு வரவில்லை, ரூ.40 ஆயிரமும் பறிபோனது. தலையில் கைவைத்த அவர் ஒரு கணம் சிந்தித்த போதுதான் அந்த சேவை எண் போலியானது என்றும் தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.
இந்த நூதன மோசடி குறித்து வடபழனி போலீஸ் நிலையத்தில் ப்ரியா புகார் அளித்தார். அவரது புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார் அந்த புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி பிரிவிற்கு மாற்றினர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சேவை மைய எண் மூலமாகவும், பணப்பரிவர்த்தனை செயலிகளான கூகுள் ப்ளே, போன் பே, பேடிஎம் போன்றவைகளை பயன்படுத்தி பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல் ஆன்லைனில் சர்வசாதாரணமாக வலம் வருகின்றனர்.
கடந்த வாரம் இதேபோல தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ், மோகன் ஆகியோர் இணையதளத்தில் போலி சேவை மையங்களை நம்பி பணத்தை இழந்தனர். அது குறித்தும் புகார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு வந்துள்ளன. பரவலாக மோசடியில் ஈடுபட்டு வரும் இது போன்ற ஆன்லைன் மாயாவிகளை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
இருந்தாலும் ஏமாறுவதற்கு ஓரளவு வேண்டாமா..? இது போலவா..? பணத்தை தொடர்ந்து மோசடி கும்பலுக்கு அனுப்பவதா...? கொஞ்சம் சிந்தித்து பார்த்திருந்தால் பணத்தை இழந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று போலீசார் ஆதங்கபட்டுள்ளனர். கூகுள் தேடுதலில் போலி சேவை எண்களை மோசடி கும்பல் பதிவிட்டு பணத்தை சுலபமாகவும் நேர்த்தியாகவும் திருடி வருகிறது. அதனால் சேவை எண்களை அந்தந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இருப்பதையே பயன்படுத்தலாம். இது போன்ற கும்பலிடம் ஏமாறாதீர்கள் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.