ஆன்லைன் தேர்வு: மதுரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

ஆன்லைன் தேர்வு: மதுரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது
ஆன்லைன் தேர்வு: மதுரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

மதுரையில் ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தக் கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தக் கோரி கடந்த இரு தினங்களாக மதுரையில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேரடியாக மட்டுமே தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டதையடுத்து கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகள் முன்பாக காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் தற்போது ரிசரவ்லைன் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மதுரை சொக்கிகுளம் மற்றும் கே.கே.நகர் வக்பு வாரிய கல்லூரி முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். தொடர்ந்து மாநகரில் கவால் துறையினர் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தகோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், காமராஜர் பல்கலைகழக கல்லூரி, மதுரா கல்லூரி, சௌராஷ்ட்ரா கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 710 கல்லூரி மாணவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொரோனா கட்டுப்பாட்டை மீறி கூட்டம் சேர்த்தல், தவறான கருத்துகளை பதிவிடும் முயற்சி என 3 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம், ஜெய்ஹிந்த்புரம், தல்லாகுளம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மீதும் தனித் தனியாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com