ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பு.. சென்னையில் மட்டும் 20% மளிகைக் கடைகள் மூடல்
ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பு, மின் கட்டணம், வாடகை உயர்வு போன்ற காரணங்களால் மளிகைத்துறை நசிந்து வருவதாக சிறு வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 20 விழுக்காடு மளிகைக் கடைகள் கடந்த 5 ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சென்னையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சிறிய மளிகை கடைகளின் எண்ணிக்கை 10,645 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்பொழுது 8,476 ஆக குறைந்துள்ளது. 2,169 மளிகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதாவது 20 சதவீதம் மளிகை கடைகள் சென்னையில் மூடப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள் மளிகைத்தொழிலில் ஈடுபடுவதாலும், அதிக சலுகைகள், ஆன்லைன் விற்பனை போன்றவற்றாலும் மளிகைக்கடைகளால் போட்டிப்போட முடியவில்லை என்கிறார்கள் இத்தொழிலில் உள்ளவர்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 முதல் 40 சதவீத வரையில் சிறிய மளிகை கடைகளில் வியாபாரத்தில் விற்பனை சரிவு சிறிய கடைகளில் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். 27 சதவீதம் அளவிலான மளிகை வியாபாரம் தற்பொழுது ஆன்லைன் மூலமாக நடைபெறுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கடை நடத்தும் இடத்தின் வாடகை உயர்ந்து வருவதும் கட்டடத்தின் சொத்து வரி உயர்வு தருணமாகவும் மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதாலும் மளிகை கடை நடத்துபவர்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலையே தொடர்கிறது.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பலரும் கடையை நடத்த முடியாமல் கைவிட்டு விட்டார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாகவும் மளிகை தொழில் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு தொழில் செய்பவர்களும் பொருட்களை வாங்க கையில் இருந்து பணத்தை கொடுத்து வாங்கும் நிலை இருக்கிறது. இதேநிலை நீடித்தால் தொழில் நசிந்து வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா..
சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதுமே இது போன்ற நிலையே இருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு மளிகை கடை வைத்து தனது குடும்பத்தின் உழைப்பை முழுவதும் அதிலேயே செலுத்தி வாழ்க்கையை நடத்தி வரும் தொழில் தான் தற்பொழுது அவர்களின் கையை விட்டு நழுவி பெரும் முதலாளிகளின் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று வேதனையாக கூறுகிறார்கள்.