200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை : பொதுமக்கள் அதிருப்தி
வெங்காயம் விலை எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்பால் அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு போன்ற பெரிய சந்தைகளில் வெங்காயம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், சில்லறை விற்பனையில் வெங்காயம் விலை மக்களை மலைக்க வைக்கிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் தலா 220 ரூபாய் வரைக்கு விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி வெங்காய மண்டியில் மொத்த விற்பனையில் சிறிய வெங்காயம் கிலோ 100 ரூபாய் வரைக்கும் பெரிய வெங்காயம் 140 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 170 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மதுரை காய்கறிச் சந்தையில் ஒருகிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் 170 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் இந்த விலை உயர்வு அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.