சென்னையில் ஒருகிலோ வெங்காயத்தின் விலை 62 ரூபாய்
நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருகிலோ வெங்காயத்தின் விலை 62 ரூபாய்க்கு மேலாக விற்கப்படுகிறது.
வெங்காய விலை ஏறினால், அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கங்கள் திணறிய சம்பவம் கடந்த காலங்களில் நடந்துள்ளன. இப்போது மீண்டும் வெங்காய விலை குடும்பங்களை கண்ணீர் விட வைத்து வருகின்றன. சென்னையில் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 62 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் வெங்காய விளைச்சல் குறைந்ததே விலை ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆந்திராவில் கோதாவரி பகுதி வெங்காயமும், மகாராஷ்டிராவில் நாசிக் வெங்காயமும் சென்னைக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆந்திராவில் இருந்து 30 லாரிகளிலும், மகராஷ்டிராவில் இருந்து 40 லாரிகளிலும் வெங்காயம் வருவது வழக்கம்.
தற்போது ஆந்திராவில் இருந்து சரிபாதியாக வரத்து குறைந்து 15 லாரிகள் மட்டுமே வருகின்றன. இதேபோல, மகாராஷ்டிராவில் இருந்து 25 லாரிகள் மட்டுமே வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் மேலும் வரத்து குறைந்துள்ளது. கர்நாடகாவை பொறுத்த வரையில் வறட்சியால் கடந்த 6 மாதங்களாக 5 லாரிகள் மட்டுமே வருகின்றன. வரத்து குறைவால் 18-ஆம் தேதி கிலோ 32 ருபாய் முதல் 35 ரூபாய் வரை விற்கப்பட்ட வெங்காயம் விலை இன்று 60 முதல் 62 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வரத்தின் அளவு தொடர்ந்து குறைந்தால் கிலோவிற்கு 70 முதல் 80 ரூபாய் வரை விற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் கோயம்பேடு மார்க்கெட் மொத்த வெங்காய விற்பனையாளர்கள். வெங்காயத்தின் விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.