மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட ஓ.என்.ஜி.சி கழிவுத்தொட்டி
புதுக்கோட்டையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட ஓ.என்.ஜி.சி எண்ணெய் கழிவுத்தொட்டி மூடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார் கொல்லையில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கழிவுத்தொட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தற்காலிகமாக தீயை அணைத்தனர். இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் தீ விபத்து ஏற்பட்ட எண்ணெய் கழிவுத்தொட்டியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பேச்சுவார்த்தை நடத்த வந்த வட்டாட்சியரையும் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து உடனடியாக எண்ணெய் கழிவுத்தொட்டி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். அதன் அடிப்படையில் தற்போது கழித்தொட்டியை உரிய முறையில் அதிகாரிகள் மூடியுள்ளனர். இதைத்தொடர்ந்து விரைவில் எண்ணெய் கிணற்றையும் மூட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இல்லையென்றால் நெடுவாசலைப் போல், நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் தொடங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.