‘ஒரே வளாகம்; ஒரே தலைமை ஆசிரியர்’ - அரசாணை வெளியீடு
ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரத்தை உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள இந்த அரசாணை, பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி இயக்குநர்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அரசாணைப்படி, அரசு, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை கண்காணிக்கும் அதிகாரம், அதே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அதே பதவியில் இருப்பார்கள். அந்தப் பள்ளிகளின் கல்வி மேம்பாடு, கட்டமைப்பு, கீழ்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் வருகை, விடுப்பு அளிப்பது, கற்பிக்கும் திறன் உள்ளிட்ட அம்சங்களை உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணிப்பார். குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் வட்டார கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்பது உள்ளிட்ட 14 அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.