பஞ்சுக்கான 1% சந்தை நுழைவு வரி ரத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் பஞ்சுக்கான 1% நுழைவுவரி ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொள்முதல் செய்யப்படும் பஞ்சு மீதான வரி 1சதவிகிதம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நெசவுத்தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. வரிவிதிப்பால் அப்பகுதி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல்வரின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் அளவில் பயன்தரும் என தெரிகிறது. மேலும், இதற்கான சட்டத்திருத்தம் நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.