தர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது
தர்மபுரியில் பாலியல் வன்கொடுமையில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாப்பிரெட்டிபட்டியில் படித்து வந்த மாணவி தீபாவளிக்காக தனது ஊருக்கு வந்துள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்ற இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைகழித்ததாக அவரது பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி 5 நாட்களுக்கு பிறகு மாணவி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரும் தலைமறைவாகினர். இதனையடுத்து, தலைமறைவான இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், மெத்தனமாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என ஆட்சியர் உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமையில் உயிரிழந்த விவகாரத்தில் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ரமேஷ் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

