மேட்டுப்பாளையத்தில் உயிருக்காக போராடும் 10 வயது யானை ! காட்டுயிர் ஆர்வலர்கள் அதிர்ச்சி

மேட்டுப்பாளையத்தில் உயிருக்காக போராடும் 10 வயது யானை ! காட்டுயிர் ஆர்வலர்கள் அதிர்ச்சி
மேட்டுப்பாளையத்தில் உயிருக்காக போராடும் 10 வயது யானை ! காட்டுயிர் ஆர்வலர்கள் அதிர்ச்சி
Published on

மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காட்டுக்குள் விழுந்து கிடக்கும் காட்டு யானை உயிருக்காக போராடி வருவது காட்டுயிர் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியில் ஆண் காட்டு யானையொன்று உடல்நலக்குறைவு காரணமாக காட்டுக்குள் விழுந்து விட்டது. மீண்டும் ஏழ வழியின்றி உயிருக்கு போராடும் யானைக்கு வனத்துறை மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்து வருகின்றனர். கோவை வனக்கோட்டத்தில் கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் பதினைந்து காட்டு யானைகள் இறந்துள்ளன. கடந்த மாதம் மேட்டுப்பாளையத்தில் ஆண் யானையொன்று சுட்டு கொல்லப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள சிறுமுகை வனப்பகுதியில் எட்டு யானைகள் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் இறந்து போயின.

இறந்த யானைகள் பெரும்பாலும் இருபது வயதிற்கு உட்பட்டவை என்பதால் இந்த இளம் யானைகளுக்கு எப்படி திடீர் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என்ற கேள்வி எழுந்தது. கோவை வனக்கோட்டதில் யானைகளின் தொடர் மரணங்கள் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியதோடு இதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தலைமையில் பதினோரு பேர் கொண்ட சிறப்பு உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு யானைகளின் தொடர் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிந்து ஆறு மாதத்தில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. அரசின் இந்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருபது நாட்களுக்கு மேலாகியும் இன்னும் இக்குழு தனது ஆய்வை துவக்கவில்லை. விரைவில் வல்லுநர் குழுவின் ஆய்வுகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் ஒரு பத்து வயதேயான ஒரு ஆண் காட்டு யானை உணவு உட்கொள்ள இயலாமல் தவித்து உடல் மெலிந்து மயங்கிய நிலையில் காட்டுக்குள் விழுந்துள்ளது.

இந்த யானை கடந்த சில நாட்களாகவே நெல்லிமலை வனப்பகுதியில் நடக்க கூட இயலாத நிலையில் மிகுத்த சோர்வுடன் மெல்ல மெல்ல நகர்ந்தபடி இருந்துள்ளது. இதனையடுத்து இந்த யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் இன்று யானை கீழே விழுந்து விட்டதை கண்டனர். இதனையடுத்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் மற்றும் வனத்துறை மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சையளித்தனர்.

யானையின் வாய் பகுதி முழுவதும் புண்ணாக்கி உணவு உட்கொள்ள முடியாமல் மிகவும் பலவீனமடைந்து கிடந்ததால் யானைக்கு முதலில் ஊசி மூலம் குளுகோஸ் ஏற்றப்பட்டது. நரம்பு வழியாக மருந்துகளும் செலுத்தப்பட்டது. ஆனாலும் யானையால் அசையக்கூட இயலவில்லை. உயிருக்கு போராடும் இந்த பத்து வயது யானை விரைவில் இறந்து விடும் நிலையிலேயே உள்ளது. கோவை வனக்கோட்டத்தில் மீண்டும் ஒரு இள வயது யானை கண்டறியப்படாத உடல்நல பாதிப்பால் கீழே கிடப்பது வன உயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com