கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரம்: தேடப்பட்டு வந்த நபர் சரண்
சென்னையில் பாலிடெக்னிக் மாணவர் சுடப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த முகேஷ். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த இவர் நேற்று தன் நண்பரான விஜய் வீட்டிற்கு சென்றார். முகேஷ் மற்றும் விஜய் இருவரும் வீட்டிற்குள் இருந்த நிலையில், சிறிது நேரத்தில் வீட்டுக்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
வீட்டுக்குள் இருந்த விஜய் வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். வெளியே நின்று கொண்டிருந்த விஜயின் அண்ணன் உள்ளே சென்று பார்த்த போது, முகேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரின் நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தது. உடனடியாக முகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், வீட்டிற்குள் என்ன நடந்த்து? துப்பாக்கி எப்படி கிடைத்தது? வாக்குவாதம் ஏதும் நடைபெற்று கொலை நடந்ததா? அல்லது திட்டமிட்ட கொலையா? என பல கோணங்களில் விசாரித்தனர். தப்பி ஓடிய விஜயையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் மாணவர் சுடப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்ட நபரான விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்