ஒரு லட்சம் பணத்தை தவறவிட்ட விவசாயி - நேர்மையுடன் ஒப்படைத்த நபர்களுக்கு கண்ணீருடன் நன்றி

ஒரு லட்சம் பணத்தை தவறவிட்ட விவசாயி - நேர்மையுடன் ஒப்படைத்த நபர்களுக்கு கண்ணீருடன் நன்றி

ஒரு லட்சம் பணத்தை தவறவிட்ட விவசாயி - நேர்மையுடன் ஒப்படைத்த நபர்களுக்கு கண்ணீருடன் நன்றி
Published on

மதுரையில் விவசாயி தவறவிட்ட ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் இதர ஆவணங்களை மீட்டுக் கொடுத்த நபர்களுக்கு விவசாயி கண்ணீருடன் நன்றி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடக்குவலையப்பட்டியைச் சேர்ந்த விவசாயி அழகன். இவரது இடத்தினை சாலை விரிவாக்கப் பணிக்காக அரசு கையகப்படுத்தி, அதற்கானப் பணத்தை அவரது வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளது. இந்நிலையில் வங்கியிலிருந்து தனது சொந்தத் தேவைக்காக ஒரு லட்ச ரூபாயை எடுத்த அழகன், தான் கொண்டுவந்திருந்த இரண்டு வங்கி கணக்கு புத்தகம், ஆதார், வருமானவரித்துறை அட்டை மற்றும் மொபைல் போன் ஆகியவற்றுடன் இந்தப் பணத்தையும் வைத்து விட்டு வீட்டிற்கு வாகனத்தில் புறப்பட்டுள்ளார். 

 அப்போது அவர் பணம் மற்றும் இதர ஆவணவங்கள் அடங்கிய பையானது வழியில் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து பணம் தொலைந்து போனதை அறிந்த அழகன், குடும்பத்தாரின் உதவியுடன் சாலை ஓரங்களில் வந்து தேடியுள்ளார். இந்நிலையில் செம்மினிப்பட்டியைச் சேர்ந்த மதிமுக ஒன்றியச் செயலாளர் இராமநாதன் மற்றும் அவருடைய நண்பரும் ஓய்வு பெற்ற தபால் காரரான வீரணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மேலூர் ஐயப்பன்கோவில் பின்புறம் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையில் மஞ்சள் பை ஒன்று கிடந்துள்ளது. அதனை அவர்கள் எடுத்து பார்த்த போது அதில் ஒரு லட்ச ரூபாயும், இதர ஆவணங்கள் இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே உள்ள நண்பர் ரவிசந்திரன் என்பவரது உரக்கடைக்கு வந்த அவர்கள், இது குறித்து ஊருக்குள் தகவல் தெரிவித்து விசாரிக்குமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து அழகன் பணத்தை தவறவிட்டது அவர்களுக்குத் தெரிய வந்தது. உடனே அவர்களை மேலூருக்கு வரச்சொல்லியுள்ளனர். இதனை தொடர்ந்து மேலூருக்கு வந்த விவசாயி அழகன் விவரங்களை கூறியுள்ளார். இதனையடுத்து இரு தரப்பினரும் வட்டாட்சியர் அலுவலகம் சென்றுள்ளனர். அங்கு வட்டாட்சியர் முன்னர் வைத்து பணம் மற்றும் இதர ஆவணங்கள் அழகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இராமநாதன் மற்றும் வீரணனை வட்டாசியர் சுந்தரபாண்டியன் பாராட்டியதுடன் நன்றியினையும் தெரிவித்தார்.

விவசாயம் செய்த நிலம் மூலம் கிடைத்தப் பணம் தவறிய நிலையில், அதனை கண்டெடுத்து உரிய முறையில் ஒப்படைத்தவர்களிடம் விவசாயி அழகன்  ஆனந்த கண்ணீருடன் நன்றி சொன்னது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com