உயிர் தப்பிக்க உணவு விடுதிக்குள் நுழைந்த இளைஞர்... ஓட ஓட விரட்டி கொலை..!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நீதிமன்ற வளாகம் அருகே ஓட ஓட விரட்டி உணவு விடுதியில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைப்பந்து போட்டி விளையாடுவது தொடர்பான தகராறில் இந்த கொலை நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் அருகேயுள்ள பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் தான் கொலை செய்யப்பட்டார். உயிர் தப்பிக்க ஓடிய அவர் மக்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் அங்கிருந்த உணவு விடுதிக்குள் நுழைந்தார். அங்கும் நுழைந்த 4 பேர் கொண்ட அந்த கும்பல் மகேஷை சுற்றிநின்று சரமாரியாக வெட்டியது.இதனை சிறிதும் எதிர்பார்த்திராத அங்கு உணவு அருந்திக்கொண்டிருந்தவர்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். சிலர் அதிர்ச்சியில் உறைந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
படுகாயத்துடன் மகேஷ் உயிருக்கு போராடிய நிலையில் அங்கு வந்த காவல்துறையினரோ குற்றவாளிகளை பிடிப்பதாக கூறி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சுமார் 25 நிமிடத்திற்கு பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் செய்தியாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் தலை மற்றும் கைப்பகுதிகளில் பலத்த வெட்டு காயம் அடைந்த அவருக்கு அதிக ரத்தம் வெளியேறியதால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, கைப்பந்து போட்டியில் விளையாட அனுமதிக்கவில்லை என்ற காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு திருவள்ளூர் அருகேயுள்ள பெருமாள்பட்டு பகுதியில் கைப்பந்துபோட்டி நடத்துவத்தில் தகராறு தொடங்கியது.
இதில் மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேருக்கும், பல வழக்குகளில் தேடப்பட்ட அதேபகுதியைச் சேர்ந்த விமல், சென்னையைச் சேர்ந்த லாலு ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. லாலு, விமல் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனிடையே இந்த மோதல் நாளடைவில் வலுக்க மகேஷின் நண்பரான விக்கியை லாலுவின் கும்பல் கொலை செய்தனர். பால் தினகரனின் கையை வெட்டினர். அடுத்தடுத்து நண்பர்களை கட்டம் கட்டியதால் அச்சமடைந்த மகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் விமலை கொலை செய்ய முயற்சி செய்தனர். அதில் அவர் தப்பிக்கவே பழி தீர்க்கும் வகையிலும், முன்விரோதம் காரணமாக மகேஷை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.