ஆற்று மணல் ஏற்றி வந்த லாரி மோதி கிராம நிர்வாக உதவியாளர் உயிரிழப்பு!!
காஞ்சிபுரத்தில் ஆற்று மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி கிராம நிர்வாக உதவியாளர் உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்டது அத்திவாக்கம். இக்கிராமத்தை சேர்ந்தவர் மோகன் தாஸ். இவர் சிறு வேடல் கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பணி நிமிர்த்தம் காரணமாக மோகன்தாஸ் தனது கிராமத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏனாத்தூர் என்னும் இடத்தில் வந்தபோது எதிரே ஆற்று மணல் ஏற்றி வேகமாக வந்த டிப்பர் லாரி மோகன் தாஸ் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார் கிராம நிர்வாக உதவியாளர் மோகன்தாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரியில் ஏற்றி வந்த ஆற்றுமணல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதா அல்லது மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்