நண்பரின் மகன் கொடுத்துவைத்த ஒரு கோடி ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்கள்! விவசாயி அதிர்ச்சி!

நண்பரின் மகன் கொடுத்துவைத்த ஒரு கோடி ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்கள்! விவசாயி அதிர்ச்சி!
நண்பரின் மகன் கொடுத்துவைத்த ஒரு கோடி ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்கள்! விவசாயி அதிர்ச்சி!

ஆத்தூர் அருகே விவசாயியின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கைவரிசைக் காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சாமியார் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி லோகநாதன் (45). இவரது குடும்ப நண்பரான கணேசன் மகன் கோபாலகிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். கோபாலகிருஷ்ணன் கடந்த மாதம் 19ஆம் தேதி லோகநாதனிடம் இரண்டு பைகளில் தலா ஒரு கோடி என 2 கோடி ரூபாய் கொடுத்து வைத்திருந்ததாகவும் அதனை ஓரிரு நாட்களில் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு கோடி பணத்தை தனது வீட்டில் அரிசி மூட்டைகளுக்கு நடுவில் ஒரு பையும், பீரோவில் ஒரு பையும் வைத்திருந்த நிலையில், நேற்று மாலை லோகநாதன் தனது குடும்பத்தாரோடு அருகில் உள்ள கோவிலுக்கு பௌர்ணமி பூஜைக்காக சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய போது வீட்டில் இருந்து இரண்டு மர்மநபர்கள் வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகநாதன் அவர்களை விரட்டி சென்றுள்ளார். எனினும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். பின்பு வீட்டில் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, அதிலிருந்து உள்ளே சென்ற அவர்கள், வீட்டின் பீரோவில் இருந்த 48 ஆயிரம் ரூபாய், ஒரு சிறிய தங்கத் தோடு மற்றும் கோபாலகிருஷ்ணன் கொடுத்திருந்த ஒரு கோடி ரூபாய் கொண்ட ஒரு பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து லோகநாதன் தலைவாசல் காவல்நிலையத்திற்கு புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்களை திரட்டி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள பணத்தை கணக்கில் வராமல் பதுக்கி வைக்கப்பட்டதா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பணம் கொடுத்து வைத்திருந்த கோபாலகிருஷ்ணன், லோகநாதனிடம் பணம் எனக்கு வேண்டும் என மிரட்டியதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com