ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்த வழக்கு : ஒருவர் கைது
சென்னை ரெட்டேரி மேம்பாலத்தின் கீழ் இரு ஆண்களின் பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தன்பால் சேர்க்கைக்கு இணங்காததாலேயே இவ்வாறு செயல்பட்டதாக, கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ரெட்டேரி மேம்பாலத்தின் கீழே, கடந்த மாதம் 25-ம் தேதி அஸ்லாம் பாஷா என்பவரும், கடந்த இரண்டாம் தேதி நாராயண பெருமாள் என்பவரும் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி அஸ்லாம் பாஷா உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்த காவல்துறையினர், சம்பவம் நடந்த ரெட்டேரி மேம்பாலம், மாதவரம், ராஜாமங்கலம், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் 8 கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள 40 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், ஒரே நபர்தான் இரு வழக்கிலும் சம்பந்தப்பட்டதை கண்டறிந்த காவலர்கள், குற்றவாளி என சந்தேகித்த நபரின் புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டனர்.
இந்நிலையில், ஒருவர் துப்பு கொடுத்ததன் பேரில் வில்லிவாக்கம் மீன் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்த மானாமதுரையைச் சேர்ந்த முனுசாமி என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். வேலை தேடி கடந்த இருமாதங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ள முனுசாமி, தன்பாலின ஈர்ப்பாளர் என்றும், தன்பால் சேர்க்கையின்போது தமக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் இருவரின் மர்ம உறுப்பையும் அவர் அறுத்துள்ளதாகவும் கூறுகின்றனர் காவல்துறையினர்.
தன்பால் சேர்க்கை குறித்து கூற தயங்கி, தனிப்பட்ட காரணங்களால் மர்ம உறுப்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக பாதிக்கப்பட்ட இருவரும் தெரிவித்ததால், விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டதாக கூறும் காவல்துறையினர், அனைத்து தரப்பினரும் ஒத்துழைத்தால் குற்றவாளிகளை பிடிப்பதும், குற்றங்களை தடுப்பதும் எளிதான ஒன்றாகிவிடும் என்கின்றனர்.