திருப்பூர்: ஒன்றரை வயதிலேயே உலக சாதனை...! யாருப்பா நீ?

அபாரமான நினைவாற்றலால் ஒன்றரை வயதில் உலக சாதனை படைத்த குழந்தையின் செயல் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குன்னாங்கல் பாளையத்தை சேர்ந்தவர்கள் விக்னேஷ் - பிரதீபா தம்பதி. இவர்களது மூத்த மகன் சாய் மகிழனுக்கு பிறந்த எட்டாவது மாதத்தில் இருந்து வன விலங்குகள், செல்லப்பிராணிகள் போன்ற புகைப்படங்களை காட்டி, அதன் பெயர்களையும் சொல்வதற்கு அவரது தாய் பயிற்சி அளித்துள்ளார்.

குழந்தை சாய் மகிழனுக்கு தற்போது ஒன்றரை வயதாகும் நிலையில், அவரது நினைவாற்றலை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார் தாய் பிரதீபா.

அதன்படியான அவரின் முயற்சியில் எட்டு வன விலங்குகள், எட்டு செல்லப்பிராணிகள், எட்டு பறவைகள், எட்டு பழங்கள், எட்டு காய்கறிகள், எட்டு வாகனங்கள், 18 வடிவங்கள், எட்டு உடல் உறுப்புகள், ஏழு தேசிய சின்னங்கள் ஆகியவற்றின் பெயரை சொன்னாலே தேர்வு செய்யும் அளவுக்கு பயிற்சி கொடுத்துள்ளார் பிரதீபா.

குழந்தை அதை சரியாக பின்பற்றிய நிலையில், இதனை காணொளியாக பதிவு செய்து Indian book of world records என்ற உலக சாதனை அமைப்புக்கு அனுப்பியுள்ளனர். இதனை அங்கீகரித்த உலக சாதனை அமைப்பு, சிறுவனுக்கு சாதனைக்கான சான்றிதழை வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஒன்றரை வயதில் உலக சாதனை படைத்த குழந்தையின் செயல் அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com