உறையூரில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஆங்காங்கே காணப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு, காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக வந்த 104 நபர்களில் 17 குழந்தைகள் உட்பட 27 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதா? என மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் உறையூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனிடையே காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிப் பிரிவும், ரத்தப் பரிசோதனை செய்வதற்கான பிரத்தேக ஆய்வகமும், உடனுக்குடன் சிகிச்சை வழங்குவதற்கான மருத்துவ குழுவினரும் தயார்நிலையில் இருப்பதாக மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் ஹர்சியா பேகம் தெரிவித்துள்ளார்.

