திருச்சி இளைஞர் வெட்டி படுகொலை.. குற்றவாளி ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
திருச்சி பீமநகரில் தாமரைச்செல்வன் என்பவரை சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தப்பியோடிய கும்பலின் ஒருவரை பொதுமக்கள் பிடித்தனர். சதீஷை பிடிக்க முயன்றபோது, காவலர்கள் காயமடைந்தனர். காவல்துறை சதீஷை சுட்டு பிடித்தது.
திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன்கோவில் அருகே உள்ள கீழத்தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன், ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அவருக்கும் சதீஷ் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பீமநகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு அருகே இரு சக்கரவாகனத்தில் நின்று கொண்டிருந்த தாமரைச்செல்வனை, சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தாமரைச்செல்வன், காவலர் குடியிருப்புக்கு தப்பி ஓடி, சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜின் வீட்டுக்குள் புகுந்து கொண்டார். ஆனால், விரட்டிச் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் தாமரைச்செல்வனை வெட்டிவிட்டு தப்பியோடினர்.
குற்றவாளி ஒருவர் சுட்டிப்பிடிப்பு..
அப்போது, காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இளமாறன் என்ற ஒருவரை பிடித்தனர். காவல் துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில், ஸ்ரீரங்கம் அருகே சதீஷை பிடிக்க முற்பட்டபோது, காவலர்கள் ஜார்ஜ் வில்லியம், மாதவராஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றார்.
இதனால், காவல்ஆய்வாளர் திருவானந்தம் கால் முட்டியில் சதீஷை சுட்டு பிடித்தார். காயமடைந்த காவலர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மாநகர காவல் ஆணையர் காமினி நலம் விசாரித்தார். கொலையில் ஈடுபட்ட பிரபாகரன், நந்து, கணேசன் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

