74 வது குடியரசு தினம்: மெரினாவில் தேசிய கொடியேற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

74 வது குடியரசு தினம்: மெரினாவில் தேசிய கொடியேற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
74 வது குடியரசு தினம்: மெரினாவில் தேசிய கொடியேற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றினார்.

74ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை மெரினா கடற்கரையில் விழாவானது நடைபெறுகிறது. விழாவில் தேசிய கொடியை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இந்தாண்டு மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் காரணமாக, மெரினாவின் காந்தி சிலை அருகே இல்லாமல் இடம் மாற்றம் செய்யப்பட்டு உழைப்பாளர் சிலை அருகில் விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் முப்படை வீரர்கள், காவல் துறை சிறப்பு படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து துறை ரீதியான சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில், முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோர் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். இந்த வருடம் பெண்கள் சிறப்பு காவல் படையின் கூட்டுக்குழு முரசு இசை நிகழ்ச்சியானது சேர்க்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தினத்தை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் மெரினா கடற்கரை பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவிகளின் மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் ஆட்டம், பிற மாநில நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெறுகிறது.

செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் இரண்டு வாகனங்கள், காவல் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுற்றுலாத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை, பொதுத் தேர்தல்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, வனத்துறை, இருந்து சமய அறநிலையத் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நெய்வேலி லிக்னைட் கார்பரேசன் லிமிடெட், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை ஆகிய துறை சார்ந்த அலங்கார ஊர்திகள் இடம் பெற உள்ளது.

இதைத்தொடர்ந்து அணி வகுப்பு மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்குவார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு முதல்-அமைச்சர் வழங்குவார். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சருடன் பதக்கம் பெற்றோர் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.

அதைத் தொடர்ந்து விழா மேடையில் கவர்னர், முதல்-அமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசின் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com