கின்னஸ் சாதனைக்காக பல மாநிலங்களை சைக்கிளில் சுற்றிவரும் முதியவர்..!
கின்னஸ் சாதனை செய்யும் விதமாக 66-வயது முதியவர் ஒருவர் பிரேக் இல்லாத சைக்கிளில் பத்து மாதங்களாக பலமாநிலங்களை சுற்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பிரகாஷ் என்ற முதியவர் பிரேக் இல்லாத சைக்கிளில் தென்இந்தியா முழுவதும் சுற்றிய நிலையில் இன்று பழனி சென்றடைந்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :-“ எனது சொந்த ஊர் கோவை மாவட்டம் வால்பாறை. தற்போது குடும்பத்துடன் கேரள மாநிலம் சாலக்குடியில் வசித்து வருகிறேன். உலக அமைதியை வலியுறுத்தியும், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் விதமாகவும் இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்து கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு என் பயணத்தை தொடங்கினேன்.
இதன்படி பிரேக் இல்லாத சைக்கிளில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்வேறு ஊர்களில் வலம் வந்தேன், தொடர்ந்து கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா வழியாக டெல்லி வரை சென்று எனது பயணத்தை முடிக்க இருக்கிறேன். இதுவரை சுமார் மூன்றாயிரம் கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்துள்ளேன்.” என்றார். 66-வயது முதியவர் ஒற்றை ஆளாக இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றி வரும் செய்தி பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

