உடல்நலம் குன்றி தவித்த முதியவர் : கருணையுடன் உதவிய காவல்துறை
மதுரையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கேட்பாரற்ற நிலையில் தவித்த முதியவரை காவல்துறையினர் மனிதநேயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரை இன்று மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆட்டோவில் இறக்கி விட்டு சென்றுள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் தவித்த முதியவருக்கு தேநீர் வழங்கி உபசரித்த அந்த பகுதி கடைக்காரர்கள், பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் முதியவர் குறித்து விசாரித்ததில் அவர் பெயர் நாராயணன் என்பதும் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்ததது.
இதனை தொடர்ந்து உடல் நலக்குறைவினால் எழ முடியாத நிலையில் இருந்த முதியவரை மீட்ட காவலர்கள், அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், அவரை தனியார் முதியோர் காப்பகத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அங்கு அனுமதித்தனர். காவல்துறையினரின் மனித நேயமிக்க இந்த செயல்பாடு அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றதுடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.